அரசும் நீதித்துறையும் கூடிக் குலாவுவது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணி: எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்ற நீதிபதி! 

அரசும் நீதித்துறையும் கூடிக் குலாவுவது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணி என்று உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசும் நீதித்துறையும் கூடிக் குலாவுவது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணி: எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்ற நீதிபதி! 
Published on
Updated on
2 min read

புதுதில்லி: அரசும் நீதித்துறையும் கூடிக் குலாவுவது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணி என்று உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மாவட்ட அமர்வு நீதிபதியாக இருப்பவர் கிருஷ்ண பட். இவர் மீது 2016-ஆம் ஆண்டு துணை நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் சில குற்றச்சாட்டுகளைக் கூறினார். பின்னர் அப்பொழுது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தாக்குர், குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ண பட் மீது விசாரணை நடத்துமாறு அப்போதைய கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி முகர்ஜிக்கு உத்தரவிட்டார். விசாரணையின் முடிவில் கிருஷ்ண பட் மீது குற்றம் எதுவும் இல்லை என்று முடிவானது.

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் சார்பில் அவரது பெயர் பதவி உயர்வுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் அவரது பெயர் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் மஹேஸ்வரி,  மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ண பட் மீது மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்திடம் அவர் இது தொடர்பாக எந்த ஆலோசனையம் பெறவில்லை. இது நீதித்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது அரசும் நீதித்துறையும் கூடிக் குலாவுவது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணி என்று உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதியுள்ள கடிதமொன்றில்  எச்சரிக்கை விடுத்துள்ளார். மார்ச் 21 ஆம் தேதியிட்ட இந்த கடிதத்தின் நகலானது உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

பெங்களூருவிலிருந்து ஒருவர் ஏற்கனவே நமது நீதிமன்ற மாண்புக்கு அடி கொடுத்து விட்டார். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நமது முதுகுக்குப் பின்னால் அரசுக்கு வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நாம் நமது சுதந்திரத்தையும், அமைப்பு ரீதியிலான இறையாண்மையையும், அதிகரித்து வரும் அரசின் ஆக்கிரமிப்புக்கு இழந்து வருவதாக குற்றம் சாட்டபப்டுகிறோம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை ஏதோ அரசுத் துறையின் தலைமை அதிகாரி போல கருதி நடத்தும் போக்கு காணப்படுகிறது. நமது பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொள்வது அபூர்வமாகி விட்டது. காலம் தாழ்த்துவதே நடைமுறையாக உள்ளது. இது ஒரு துன்பமான அனுபவமாக மாறியுள்ளது.

நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு பரிந்துரைகளை அளிப்பதோடு உயர் நீதிமன்றத்தின் பணி முடிந்து விடுகிறது. அதற்கு மேல் என்ன விதமான தகவ்கள் தொடர்போ, விளக்கம் கோருதலோ அரசுக்கும் உச்ச நீதின்றதுக்கும் நடுவில் மட்டும்தான்.

ஒரு நீதிபதி தொடர்பான பரிந்துரை காத்திருப்பில் இருக்கையில் அவர் மீது  நடவடிக்கை எடுப்பது பற்றிய சம்பவம் இதுவரை கேள்விப்பட்டதில்லை. உச்ச நீதிமன்ற கொலிஜிய பரிந்துரையை கேள்விக்குள்ளாக்குவது ஏற்புடைத்தல்ல. 

அரசும் நீதித்துறையும் கூடிக் குலாவுவது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணி  போன்றது என்பதை மறக்க கூடாது. இருவருமே அரசியல் சாசனத்தின் பரஸ்பர காவல்காரர்கள். 

இது தொடர்பாக உடனடியாக அனைத்து நீதிபதிகளின் கூட்டம் ஒன்றைக் கூட்டி விவாதிக்க வேண்டும். அரசியல் சாசன வழிமுறைகளின் படி உச்ச நீதிமன்ற இருப்பை உறுதி செய்ய இதுவே சிறந்த வழி.

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com