
மத்திய பாஜக அரசு பதவியேற்றது முதல் விளம்பரங்களுக்காக ரூ.4 ஆயிரத்து 300 கோடி செலவு செய்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் திங்கள்கிழமை தெரியவந்துள்ளது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் பதவியேற்றது முதல் தற்போது வரை விளம்பரங்களுக்காக செய்துள்ள மொத்த செலவின் தொகையை தெரிவிக்குமாறு மும்பையைச் சேர்ந்த அனில் கால்காலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக ஆர்டிஐ அளித்த பதிலில் நிதி ஆலோசகர் தபன் சூத்ரதார் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ரூ.4 ஆயிரத்து 300 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் விமர்சனங்களுக்கு இடையில் 2017-ஆம் ஆண்டில் இந்த செலவில் இருந்து ரூ.308 கோடி குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
நிதியாண்டு மற்றும் துறை ரீதியாக மத்திய அரசு விளம்பரங்களுக்காக செய்த மொத்த செலவுகளின் விவரம் பின்வருமாறு:
2014 ஜூன் முதல் 2015 மார்ச் வரை: அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.424.85 கோடி, டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.448.97 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.79.72 என மொத்தம் ரூ.953.54 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
2015-16 நிதியாண்டு: அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.510.69 கோடி, டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.541.99 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.118.43 என மொத்தம் ரூ.1,171.11 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
2016-17 நிதியாண்டு: அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.463.38 கோடி, டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.613.78 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.185.99 என மொத்தம் ரூ.1,263.15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
2017-18 நிதியாண்டு: டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.475.13 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.147.10 செலவு செய்யப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலகட்டத்தில் அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.333.23 செலவு செய்துள்ளது. ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரை மொத்தம் ரூ.955.46 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.