உச்ச நீதிமன்றத்தின் கடந்த வார உத்தரவின்படி, காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி. ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மத்திய நீர் வளத்துறை செயலர் யு.பி. சிங் ஆஜராகி வரைவு செயல் திட்டத்தை சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், "செயல்திட்டத்துக்கு மத்திய அரசு எவ்விதப் பெயரையும் வழங்கவில்லை. அது "வாரியம்', "ஆணையம்', "குழு ' என்று இருக்கலாம். அந்தப் பெயரை நீதிமன்றமே முடிவு செய்யலாம். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிகரானதாக செயல் திட்டம் இருக்கும்' என்றார்.
மேலும், "செயல்திட்டம் குறித்த விவாதத்தை உருவாக்கும் வகையில் செயல் திட்டத்தின் நகல்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கலாம். அல்லது வரைவு செயல் திட்டத்தை இறுதிப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடலாம்' என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, "செயல்திட்டத்தின் சட்ட நிலைகளை ஆராய விரும்பவில்லை. 2007-இல் காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவின்படியும், உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-இல் அளித்த தீர்ப்பின்படியும் மத்திய அரசின் வரைவு செயல்திட்டம் உள்ளதா என்பது குறித்து மாநிலங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். வரைவு செயல் திட்டத்தின் நகல்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உடனே வழங்க வேண்டும். வழக்கு விசாரணை மே 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றார்.
முக்கிய அம்சங்கள்: செயல்திட்டத்தை "காவிரி நீர் மேலாண்மைத் திட்டம் 2018' என அழைக்கலாம். இத்திட்டம் அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து அமலுக்கு வரும். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ள ஆணையத்தின் (அத்தாரிட்டி) தலைவரை மத்திய அரசு நியமிக்கும். நீர்வளத் துறை அமைச்சகத்தில் அனுபவமிக்க மூத்த பொறியாளராகவும், மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பங்கீட்டு பிரச்னைகளை, நீர்ப்பாசனத் திட்டங்களை கையாண்டவராகவும் அனுபவம் உள்ள ஒருவர் இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவார். அவரது பதவிக் காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரையிலும் இருக்கும்.
ஆணையத்தில் இடம் பெறவுள்ள முழு நேர உறுப்பினர்கள் இருவர், பகுதி நேர உறுப்பினர்கள் இருவர் ஆகியோரை மத்திய அரசு நியமிக்கும். கேரளம், கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்கள் தலா ஒரு பகுதி நேர உறுப்பினரை முன்மொழியும். ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு முதல்கட்டமாக ரூ. 2 கோடி அளிக்கும்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள மாநிலங்களான கேரளம் 15 சதவீதம், தமிழகம், கர்நாடகம் முறையே தலா 40 சதவீதம், புதுச்சேரி 5 சதவீதம் என மொத்தம் ரூ. 2 கோடி அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16-இல் அளித்த இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதை இந்த ஆணையம் உறுதி செய்யும். ஒழுங்காற்றுக் குழுவுடன் இணைந்து அணைகளின் செயல்பாடுகளையும், அணைகளிலிருந்து நீர் திறப்பதை முறைப்படுத்துவதையும் ஆணையம் கண்காணிக்கும்.
மேலும், ஒவ்வொரு நீர் ஆண்டு தொடங்கும் ஜூன் முதல் தேதி அணைகளில் தேக்கிவைக்க வேண்டிய நீரின் அளவையும் ஆணையம் முடிவு செய்யும். நீர்வரத்து, அணைகளுக்கு திறக்கப்படும் நீர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நீர்ப் பங்கீட்டை ஆணையம் தீர்மானிக்கும். அணைகளிலிருந்து திறக்கப்பட்ட நீரின் பயன்பாட்டை அறிய காவிரிப் படுகையில் விளைச்சலை ஆணையம் ஆய்வு செய்யும். காவிரிப் படுகையில் வறட்சிச் சூழலை மத்திய நீர் ஆணையத்தின் உதவியுடன் ஒழுங்காற்றுக் குழு மூலம் ஆணையம் கண்டறியும்.
பருவகால நீர்த் தேவைக்காக சாகுபடி முறை, பாசனம், நீர் மின் உற்பத்தி, உள்ளூர் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான நீர் உள்ளிட்ட விவரங்களை அறிய கேரளத்தில் உள்ள பானசுரசாகர், கர்நாடகத்தில் உள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜ சாகர், தமிழகத்தில் உள்ள கீழ் பவானி, அமராவதி, மேட்டூர் ஆகிய அணைகளை ஆணையத்தின் முழு வழிகாட்டுதல்களின் படி ஒருங்கிணைந்த முறையில் தலா 10 நாள்கள் என்ற அடிப்படையில் ஆண்டு முழுவதும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இயக்கும்.
ஆணையத்தின் முடிவுகளை அமல்படுத்துவதில் ஏதாவது ஒரு மாநிலம் ஒத்துழைக்க மறுத்தால், அது தொடர்பாக மத்திய அரசின் உதவியை ஆணையம் நாடும். அப்போது மத்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது; அனைத்து மாநிலங்களையும் அது கட்டுப்படுத்தும். ஒவ்வொரு நீராண்டு நிறைவிலும் காவிரிப் படுகையில் உள்ள விளைச்சலை ஆணையம் மதிப்பீடு செய்யும். மேலும், அணைகளில் உள்ள நீரின் இருப்பையும், அணைகளிலிருந்து திறக்க வேண்டிய நீரின் அளவையும் ஆணையம் தீர்மானிக்கும்.
ஒழுங்காற்றுக் குழு: இதேபோல, ஆணையத்தின் கீழ் அமைக்கப்படும் ஒழுங்காற்றுக் குழுவில் நீர்வளத் துறையைச் சேர்ந்தவர் தலைமையில் நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களை கேரளம், கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் முன்மொழியும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணைச் செயலாளருக்கு இணையான அந்தஸ்துள்ள ஒருவர், மத்திய நீர் ஆணையத்திலிருந்து ஒருவர், மத்திய வேளாண்துறையிலிருந்து ஒருவர், உறுப்பினர் செயலாளராக ஆணையத்தின் செயலாளர் இடம் பெறுவர். அணைகளில் உள்ள நீர், நீர்வரத்து, நீர் இருப்பு ஆகியவற்றின் விவரங்களை நாள்தோறும் ஒழுங்காற்றுக் குழு சேகரிக்கும். ஆணையத்தின் உத்தரவுப்படி அணைகளில் மாதந்தோறும் 10 நாள்களுக்கு திறக்கப்பட வேண்டிய நீரின் அளவையும் உறுதி செய்யும் என வரைவு செயல்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல தீர்வு கிடைக்கும்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்வைப் பெற்றுத் தரும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சேலத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி வரைவு அறிக்கையில் சில யோசனைகளும், கருத்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையின்படி, வரும் மே 16 ஆம் தேதி தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்வு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே

தொகுதி மாறிய நயினாா் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக

சோழவந்தான்(தனி) மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யாா்?

தோ்தல் பிரசாரம்: வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


