எனது தந்தைக்கு ஏற்பட்ட கறும்புள்ளியை அழிக்கவே காங்கிரஸுடன் கூட்டணி: குமாரசாமி

பாஜக-வில் இருந்து வெளியேறி எங்களுடன் இணைய பலர் தயாராக உள்ளனர். எனவே பாஜக எங்களிடம் இருந்து ஒன்றை திருடினால், நாங்கள் அதற்கு இரட்டிப்பாக பதிலடி தருவோம். 
எனது தந்தைக்கு ஏற்பட்ட கறும்புள்ளியை அழிக்கவே காங்கிரஸுடன் கூட்டணி: குமாரசாமி

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் பெங்களூருவில் குமாரசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கர்நாடக சட்டப் பேரவை மஜத குழுத் தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார்.

எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு பின் அடுத்தக்கட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் குமாரசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜக-வுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என எங்கள் கட்சி எம்எல்ஏ-க்களுக்கு பாஜக ஆசை காட்டுகிறது. பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடும் நிலையில் வருமானவரித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் பதவியை நாட்டு நலனுக்காக உதறிவிட்டு வந்தது எங்கள் குடும்பம். எனவே நான் அதிகாரத்துக்கு ஆசைப்படவில்லை.

எனக்கு இருதரப்பில் இருந்து அழைப்புகள் வந்தன. கடந்த 2004-05 ஆண்டுகளில் நான் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்ததால் எனது தந்தையின் பொது வாழ்கையில் கறும்புள்ளி ஏற்பட்டது. தற்போது அதை அழிக்கும் அரிய வாய்ப்பை கடவுள் எனக்கு வழங்கியுள்ளார். எனவே நான் காங்கிரஸுடன் முழுமனதாக கூட்டணி ஏற்படுத்தியுள்ளேன்.

வடக்கிலிருந்து பாஜக அசுவமேத யாத்திரை நடத்தி வருகிறது. தற்போது அந்த குதிரைகள் கர்நாடகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அந்த அசுவமேத யாத்திரையை நிறுத்துவதே இந்த கூட்டணியின் இறுதித் தீர்ப்பு. 

பாஜக-வில் இருந்து வெளியேறி எங்களுடன் இணைய பலர் தயாராக உள்ளனர். எனவே பாஜக எங்களிடம் இருந்து ஒன்றை திருடினால், நாங்கள் அதற்கு இரட்டிப்பாக பதிலடி தருவோம். குதிரை பேரத்துக்கு ஊக்கமளிக்கும் விதமான எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என ஆளுநருக்கு கோரிக்கை வைக்கிறேன் என்றார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com