

புது தில்லி: காவிரி மேலாண்மை வாரியம் என வரைவு திட்டத்தில் மாற்ற உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட மத்திய அரசு, இன்று தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு திட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று பெயரிட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசு, இன்று உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது அதனை பட்டவர்த்தனமாகவே செய்துள்ளது.
காவிரி வரைவு திட்டம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது,
தமிழக அரசு வாதம்: தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே முன் வைத்த வாதத்தில், "மத்திய அரசு அளித்துள்ள வரைவு செயல் திட்டத்தில் நான்கு முக்கியத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
முதலாவதாக, அத்தாரிட்டி என்ற சொல்லுக்கு "காவிரி மேலாண்மை வாரியம் எனப் பெயரிட வேண்டும்" என்றார். அப்போது, குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், "இந்த பெயர் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்" என்றார்.
அப்போது, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில வழக்குரைஞர்களிடம், காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயர் சூட்டுவதற்கு சம்மதமா என கேட்கப்பட்டது. எந்த மாநில வழக்குரைஞரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அதற்கு, பெயரில் என்ன இருக்கிறது, வாரியம் என்ற பெயரே இருக்கட்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் கருத்துக் கூறியிருந்தனர்.
ஆனால், நேற்றைய விசாரணையின் போது காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க ஆட்சேபனை தெரிவிக்காத மத்திய அரசு, இன்று தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயர் வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இதற்கு தமிழக அரசின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
நேற்று மத்திய அரசும், கர்நாடக அரசும் வாரியம் என பெயர் வைக்க ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று மத்திய அரசு கூறியுள்ளது ஏன்? என்று கேட்டு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இறுதித் தீர்ப்பின் போது கவனத்தில் கொள்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதாகவும், எனவே, தமிழகத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புவதாகவும் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
அதே சமயம், காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் தலைமை அலுவலகத்தை தில்லிக்கு மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பெங்களூருவுக்கு பதில் தில்லியில் தலைமையகத்தை மாற்றி அமைத்து வரைவு திட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.