
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். பொதுமக்களில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லையில் உள்ள நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அதிகாலை 4 மணிக்கு நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வந்தது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பி.எஸ்.எப். வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
வீர மரணம் அடைந்த வீரர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதி பகுதியைச் சேர்ந்த சிதராம் உபத்யாய்(28). இவருக்கு மூன்று வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையில் உபத்யாய் இணைந்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலில் பொதுமக்களில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் அத்துமீறலால் எல்லைப் பகுதியில் 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியில் உள்ள நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியில் வசிப்பவர்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.