கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் தற்போது பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நோயால், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தாருக்கு பெரம்ப்ரா தாலுகாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் லினி என்பவருக்கும் பரவியது.
இந்நிலையில், அந்த செவிலியர் லினி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இதையடுத்து, இந்த நோய் மற்றவர்களுக்கு பரவக்கூடும் என்பதால் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல் இரவோடு இரவாக சீல் வைத்து தகனம் செய்யப்பட்டது.
அவர் இறப்பதற்கு முன்பாக தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சமூகவலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. அவருக்கு 5 வயதிலும், 2 வயதிலும் 2 குழந்தைகள் உள்ளனர்.
தனது கடைசி கடிதத்தில் லினி கூறியிருப்பதாவது,
"சஜீஷேட்டா, நான் இறக்கப்போகிறேன். உங்களை நான் திரும்ப பார்க்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. நமது குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து அவர்களை தங்களுடன் வளைகுடா நாட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். எனது தந்தை போல் அவர்களை தனியாக விட்டுவிடாதீர்கள். அன்புடன்...முத்தங்களுடன்..." என்றார்.