ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற தர்ம போராட்ட சபையில் அக்கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஆந்திர அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது ஆந்திர அமைச்சரும், முதல்வர் சந்திரபாபு நாயுடு மகனுமான நர லோகேஷ் பேசியதாவது:
ஆந்திர மாநிலத்துக்கு உதவும் என்கிற நம்பிக்கையுடன் கடந்த 2014 தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக-வுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இது எதுவும் நடைபெறவில்லை.
ஆந்திர மாநிலத்தில் ஒரு வார்டு தேர்தலில் கூட வெற்றிபெற தகுதியில்லாத பாஜக, எங்களுடன் கூட்டணி அமைத்ததால் தான் எம்எல்ஏ மற்றும் எம்எல்சி பெற்றனர். அவர்களுக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கியது தெலுங்கு தேசம் கட்சிதான்.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சக்தியை மீறி இந்திரா காந்தியால் கூட ஆட்சிக்கு வரமுடியவில்லை. பாஜக-வுக்கு கர்நாடகத்தில் நடந்தது வெறும் டிரைலர் தான், 2019-ல் தான் திரைப்படம் வெளியாகவுள்ளது என்றார்.
பின்னர் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மிகவும் பழமையான கட்சியான காங்கிரஸ் காணாமல் போனது போன்ற நிலை விரைவில் பாஜக-வுக்கும் ஏற்படும் என்றார்.