அரசியல் கட்சி துவங்கிய பிரபல கால்பந்து வீரர்: 3-ஆவது அணியில் இணைய திட்டம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பைசுங் பூட்டியா வியாழக்கிழமை அரசியல் கட்சி துவங்கினார். மேலும் 3-ஆவது அணியில் இணைந்து செயல்படவும் திட்டமிட்டுள்ளார்.
அரசியல் கட்சி துவங்கிய பிரபல கால்பந்து வீரர்: 3-ஆவது அணியில் இணைய திட்டம்
Published on
Updated on
1 min read

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பைசுங் பூட்டியா (வயது 41), வியாழக்கிழமை அரசியல் கட்சி துவங்கினார். மேலும் 3-ஆவது அணியில் இணைந்து செயல்படுவது தொடர்பாகவும் திட்டமிட்டுள்ளார். இந்தியாவில் கால்பந்து விளையாட்டு பிரபலமாக மிக முக்கிய காரணமாக இருந்தவர், தற்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பைசுங் பூட்டியா கூறியதாவது:

எங்கள் கட்சி இளைஞர்களால் நிறைந்திருந்தாலும், வழிநடத்திச் செல்வதற்கு அனுபவமிக்கவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஊழல் மற்றும் தற்போதைய ஊழல் நிறைந்த அரசுக்கு எதிராகப் போராடுவதுதான் எங்களது முதல் இலக்கு. ஆம் ஆத்மி கட்சியை முன்மாதிரியாக வைத்துதான் இந்த கட்சி துவங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஊழலை ஒழிப்பதிலும், தில்லியில் மக்களிடம் வரவேற்பு பெற்றதிலும் அக்கட்சி எடுத்த நடவடிக்கைகள் தான் அதற்கு முக்கியக் காரணம்.

அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்பின்மையை போக்கவும், போதைப் பொருட்களை ஒழிப்பதிலும் அதிக கவனம் செலுத்துவோம். கடந்த 25 வருடங்களாக சிக்கிம் மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் கட்சி ஊழலால் நிரம்பியுள்ளது. எனவே அவர்களை வீழ்த்துவதுதான் எங்கள் நோக்கம்.

கால்பந்து களத்தில் கோல் அடிப்பதை விட அரசியல் களத்தில் வெற்றி பெறுவது மிகவும் கடினமானது. இருந்தாலும் நான் இந்த மண்ணின் மைந்தன் என்பதால் அரசியல் களத்தில் துவங்கியுள்ள எனது 2-ஆவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறேன். சிக்கிம் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவோம். அதுபோல இந்திய அளவில் ஜனநாயக ரீதியிலான 3-ஆவது அணியில் இணைவது தொடர்பாகவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

முன்னதாக, 2014 நாடாளுமன்ற மற்றும் 2016 சட்டப் பேரவைத் தேர்தல்களில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகி, தனது நண்பர்களுடன் புதிய கட்சியை பைசுங் பூட்டியா துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com