
அமிருதசரஸ் ரயில் விபத்து தொடர்பான விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து ஆஜராகவில்லை.
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா பண்டிகையையொட்டி கடந்த மாதம் 19-ஆம் தேதி இரவு ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாப் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
இந்த ராவண வதத்தைக் காண்பதற்கு ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களில் பலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்று, ராவண வதத்தைப் பார்த்துக்கு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் 61 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த விசாரணையை மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.புருஷர்தா நடத்தி வருகிறார். இந்த விசாரணையின் அங்கமாக பஞ்சாப் அமைச்சர் சித்து மற்றும் அவரது மனைவி நவ்ஜோத் கௌர் ஆகியோரை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர் சம்மன் அனுப்பியிருந்தார்.
ஆனால், இந்த விசாரணைக்கு சித்து ஆஜராகவில்லை. இதையடுத்து, ஆஜராகாதது குறித்து அவர் மாலையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
"அக்டோபர் 16 முதல் 20 வரை நான் பஞ்சாபில் இல்லை. அதனால், எனது கருத்துகள் எதுவும் உங்களுடைய விசாரணைக்கு உதவாது என்று விசாரணை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்" என்றார். அதேசமயம், அவரது மனைவி நவ்ஜோத் கௌர் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.
விசாரணை ஆணையம் முன் ஆஜரான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நவ்ஜோத் கௌர்,
"அவர் (நவ்ஜோத் சிங் சித்து) வீட்டில் தான் இருக்கிறார். அவருக்கு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சி இருக்கிறது. ஆணையத்துக்கு தான் கூற வேண்டிய கருத்து அனைத்தையும் அவர் அனுப்பிவிட்டார்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.