
புது தில்லி: பாஜக ஆளாத மாநிலங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் போது பிரதமர் நரேந்திர மோடி சுயக்கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
முன்னாள் இணை அமைச்சர் மனீஷ் திவாரியின் 'ஃபேப்லஸ் ஆஃப் ஃபிராக்சர்டு டைம்ஸ்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஒரு பிரதமருக்கான கண்ணியத்தை மோடி கடைபிடிக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி பேசும் போது சுயக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்பதே எனது அறிவுரை என்றும் கூறினார்.
மேலும், பிரதமர் மோடி பாஜக ஆளாத மாநிலங்களுக்குச் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் போது, தற்போது பேசுவது போன்ற வார்த்தைகளை பிரயோகப்படுத்தாமல், கண்ணியமான பேச்சைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் பிரதமராக இருப்பவர், முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அவர்தான் நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பிரதமர். எனவே, அவரது செயல்பாடுகளும் பேச்சும் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முன்னாள் பிரதமர், தற்போதைய பிரதமருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.