
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, சிதம்பரம் மற்றும் கார்த்தி இருவரும், மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இவ்வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதுவரை சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.