நாடு முழுவதும் 53 நகரங்களில் பிரத்யேகமாக ஆதார் சேவை மையங்களை அமைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) முடிவு செய்துள்ளது. சுமார் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரையிலான மதிப்பீட்டில் அவை அமைய உள்ளன.
அடுத்த ஆண்டு முதல் அந்த சேவை மையங்கள் செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக அந்தச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த இடங்களில் நாளொன்றுக்கு 1 லட்சம் பேர் ஆதார் பதிவுக்காக விண்ணப்பிப்பதாகவும், 4 லட்சம் பேர் திருத்தங்களை மேற்கொள்வதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், யுஐடிஏஐ சார்பில் பிரத்யேக ஆதார் சேவை மையங்களை நாடு முழுவதும் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
அதன்படி பெரு நகரங்களில் தலா 4 மையங்களும், பிற நகரங்களில் தலா 2 மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
பாஸ்போர்ட் சேவை மையங்களைப் போல இந்த மையங்களிலும் விண்ணப்பதாரர்கள் நேரத்தை முன்பதிவு செய்து கொண்டு சேவைகளைப் பெற முடியும் என யுஐடிஏஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறுபுறம் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆதார் பதிவு நடவடிக்கைகள் வழக்கம்போல தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் உதவிகள் பெற ஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. வங்கிக் கணக்கு தொடங்கவும், செல்லிடப்பேசி சிம் கார்டு இணைப்புக்கும் ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இது மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும், தனிநபர் சுதந்திரத்துக்குப் புறம்பான நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக, பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ஆதார் சட்டப்படி செல்லும் என தீர்ப்பளித்தது. அதேவேளையில், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், சிம் கார்டு பெறவும் ஆதார் கட்டாயம் இல்லை என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.