சிபிஐ சர்ச்சையில் உச்ச நீதிமன்ற உத்தரவானது நேர்மையான விசாரணைக்கு உதவும்: அருண் ஜேட்லி 

சிபிஐ சர்ச்சையில் உச்ச நீதிமன்ற உத்தரவானது நேர்மையான விசாரணைக்கு உதவும்: அருண் ஜேட்லி 

சிபிஐ இயக்குநர்கள் தொடர்பான சர்ச்சையில் உச்ச நீதிமன்ற உத்தரவானது நேர்மையான விசாரணைக்கு உதவும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்

புது தில்லி: சிபிஐ இயக்குநர்கள் தொடர்பான சர்ச்சையில் உச்ச நீதிமன்ற உத்தரவானது நேர்மையான விசாரணைக்கு உதவும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

சிபிஐ இயக்குநர் அலோக் குமார், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் செல்லுமாறு உத்தரவிட்ட மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக எம்.நாகேஸ்வர ராவை நியமித்தது. மேற்கண்ட இரு அதிகாரிகள் இடையிலான மோதல்போக்கு, அஸ்தானா மீதான லஞ்ச வழக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடந்த செவ்வாய்-புதன் இடையிலான ஒரே இரவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிராக அலோக் குமார் வர்மா, உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில், முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐ அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து, ஒரே இரவில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டது சட்டவிரோதம்; இதுபோன்ற தலையீடுகள், சிபிஐ-யின் சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் சீர்குலைத்துவிடும் என்று மனுவில் அலோக் குமார் வர்மா கூறியிருந்தார்.

இந்த மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சய் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையின் முடிவில் நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுகள் பின்வருமாறு: 

சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு, சிபிஐ மற்றும்  சிவிசி பதிலளிக்க வேண்டும். 

சிபிஐயின் தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவ், பெரிய அளவில் கொள்கை முடிவு எதையும் எடுக்கக் கூடாது 

சிபிஐயின் தற்காலிக இயக்குநராக பொறுப்பேற்ற அக்டோபர் 23ம் தேதி முதல் இந்த நாள் வரை எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் எதையும் நாகேஸ்வர ராவ் நடைமுறைப்படுத்தக் கூடாது.  தான் எடுக்கும் கொள்கை முடிவுகள் தொடர்பான விவரங்களை மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்ய வேண்டும். 

சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களின் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் மீது மத்திய விசாரணை ஆணையம் நடத்தும் விசாரணையை 2 வார காலத்துக்குள் நடத்தி முடித்து, அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் விசாரணையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். 

இவ்வாறு நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் சிபிஐ இயக்குநர்கள் தொடர்பான சர்ச்சையில் உச்ச நீதிமன்ற உத்தரவானது நேர்மையான விசாரணைக்கு உதவும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தில்லியில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

விசாரணைக்கு இரு வார கால அவகாசம் அளித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவானது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதன்மூலம் விசாரணையின் நேர்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படும். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது நியாயமான விசாரணைநடைபெறுவதை உறுதி செய்யும்.   

வர்மா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதால் நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டே, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்ற உத்தரவை நாங்கள் நேர்மறையான முன்னேற்றமாகவே பார்க்கிறோம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com