
ஹைதராபாத்: ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டநால்வரில் இருவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், மற்ற இருவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
ஹைதராபாத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி லும்பினி பார்க் மற்றும் கோகுல் சாட் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 42 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு, இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த அனீக் சபீக் சயீத், அக்பர் இஸ்மாயில் சவுத்ரி, முகமத் சாதிக் மற்றும் அஹமத் பாதுஷா ஷேக் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூன்று குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஐதராபாத் பெருநகர இரண்டாவது குற்றவியல் நீதிமன்றம் கடந்த மாதம் 27-ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் அன்று வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த தேசிய புலனாய்வு ஆணைய சிறப்பு நீதிமன்றம், மற்ற இருவரை விடுதலை செய்து செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது.
விசாரிக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணகளின் அடிப்படையில் அனீக் சபீக் சயீத் மற்றும் அக்பர் இஸ்மாயில் சவுத்ரி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதே சமயம் முகமத் சாதிக் மற்றும் அஹமத் பாதுஷா ஷேக் ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
வழக்கின் தணடனை விபரம் வரும் திங்களன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.