நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடிக்கு எதிராக சர்வதேச பிடியாணை 

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேட்டில் தொடர்புடைய தொழிலதிபர் நீரவ் மோடியின் சகோதரி பூர்வி தீபக் மோடிக்கு எதிராக சர்வதேச ரெட் கார்னர் (பிடியாணை) நோட்டீஸை, பன்னாட்டு காவல்துறை திங்கள்கிழமை வெளியிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேட்டில் தொடர்புடைய தொழிலதிபர் நீரவ் மோடியின் சகோதரி பூர்வி தீபக் மோடிக்கு எதிராக சர்வதேச ரெட் கார்னர் (பிடியாணை) நோட்டீஸை, பன்னாட்டு காவல்துறை திங்கள்கிழமை வெளியிட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியின் ஃபையர் ஸ்டார்' நகைக்கடை நிறுவனத்துக்காக ரூ.13,000 கோடி கடனை முறைகேடான வழிகளில் பெற்று அதனை திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, நீரவ் மோடியும், முறைகேட்டில் தொடர்புடையவராக கருதப்படும் அவரது உறவினர் மெஹூல் சோக்ஸியும் கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டுக்கு தப்பியோடினர். அதன் பிறகு அவர்களை கண்டறிய இயலவில்லை.

இதனால், நீரவ் மோடிக்கு எதிராக சர்வதேச காவல்துறை சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டிருந்தது. பிறகு, அவரது நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியான மிஹிர் ஆர்.பன்சாலிக்கு எதிராக அதேபோன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், நீரவ் மோடியின் சகோதரி பூர்வி தீபக் மோடிக்கு எதிராகவும் தற்போது சர்வதேச ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. 

பன்னாட்டு காவல்துறையினர் அடிப்படையில், பூர்வி பெல்ஜியம் நாட்டு குடியுரிமையைப் பெற்றவர். அவர் ஆங்கிலம், குஜராத்தி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசக் கூடியவர்.  

இதுதொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், 

"அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், பூர்வி மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டியுள்ளது. விசாரணை நடவடிக்கைகளை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல இது அவசியமானதாகும்" என்றனர். 

பூர்வி தீபக் மோடியை தங்கள் நாடுகளில் கண்டறிந்தால் அவரை கைது செய்ய வேண்டும் அல்லது தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என சர்வதேச காவல்துறையை கொண்டுள்ள 192 உறுப்பு நாடுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com