பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் அரங்கேற முடியாது என்பதால் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்தது நல்ல முடிவு என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் பேசுகையில்,
"பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் அரங்கேற முடியாது என்பது அரசின் கொள்கை. அதனால், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்திய அரசின் கொள்கை தெளிவாக உள்ளது. இதனை பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்திவிட்டோம்.
மற்ற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை எங்களது மண்ணில் அனுமதிக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், பயங்கரவாத நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து பார்க்கிறோம், பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வருகின்றனர். நாங்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவில்லை என்பதை தங்களது நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பதை அரசு தான் முடிவு செய்யும். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடைபெறாது என்பதால் அரசு நல்ல முடிவை தான் எடுத்துள்ளது என்று எண்ணுகிறேன்" என்றார்.