இந்தியாவில் ரூ.1,015 கோடி சொத்து வைத்துள்ள கோடீஸ்வர எம்.எல்.ஏ யார் தெரியுமா? 

கர்நாடகாவில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எம்.டி.பி.நாகராஜ், இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ., என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியாவில் ரூ.1,015 கோடி சொத்து வைத்துள்ள கோடீஸ்வர எம்.எல்.ஏ யார் தெரியுமா? 

கர்நாடகாவில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எம்.டி.பி.நாகராஜ், இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ., என்ற பெருமையை பெற்றுள்ளார். 8 ஆம் வகுப்பு வரையே படித்துள்ள இவரின் சொத்து மதிப்பு ரூ.1,015 கோடி. 

கர்நாடகத்தில் தனித்து ஆட்சி அமைக்க சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில்,  78 இடங்களுடன் காங்கிரசும், 38 இடங்களுடன் மஜதவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன.

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக குமாரசாமியும், துணை முதல்வராக ஜி.பரமேஸ்வரும் கடந்த மே 23-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர், துணை முதல்வர் பதவிகளுடன் 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரஸ் 22 இடங்களையும், மஜத 12 இடங்களையும் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்யப்பட்டன. இரு கட்சிகளும் துறைகளையும் ஒதுக்கிக்கொண்டன.  

இந்த நிலையில், கடந்த ஜூன் 6 ஆம் தேதி புதிய அமைச்சர்களாக காங்கிரசைச் சேர்ந்த 14, மஜதவை சேர்ந்த 9, பகுஜன்சமாஜ் கட்சி மற்றும் கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சியை சேர்ந்த தலா ஒருவர் உள்பட 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 

இவர்களில் பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்த என்.மகேஷ் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால், அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் 6, மஜத சார்பில் 2 இடங்கள் காலியாக இருந்தன. 

இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து காங்கிரசின் அமைச்சர்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, கூட்டணி கட்சியான கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சியின் ஆர்.சங்கரும் அமைச்சரவையில் இருந்து கைவிடப்பட்டனர்.  இதை தொடர்ந்து, பெங்களூரு, ஆளுநர் மாளிகையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த விழாவில் புதிதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் வஜுபாய்வாலா பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.  

எம்.பி.பாட்டீல்,  ஆர்.பி.திம்மாப்பூர், சதீஷ் ஜார்கிஹோளி, சி.எஸ்.சிவள்ளி, பரமேஸ்வர் நாயக், இ.துக்காராம், ரஹீம்கான், எம்.டி.பி.நாகராஜ் ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சரவை திருத்தியமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 34 பேர் கொண்ட அமைச்சரவையில் 32 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 2 இடங்களை மஜத வெகுவிரைவில் நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதியதாக அமைச்சராக பதவியேற்றுள்ளவரும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளருமான பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.டி.பி.நாகராஜ் என்கிற நாகராஜூ(66) சொத்து மதிப்பு ரூ.1,015 கோடி என்ற 
தகவல் வெளியாகி உள்ளது. 

8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள 'குருபா' சமூக தலைவரான எம்.டி.பி.நாகராஜ் விவசாயம், வர்த்தகம் மற்றும் பிற தொழில்கள் வாயிலாக அசையும் சொத்தாக ரூ.437 கோடியும், அசையா சொத்தாக ரூ.578 கோடியும் வைத்துள்ளார். இதையடுத்து இந்தியாவின் கோடீஸ்வர அமைச்சர் என்ற பெருமையை எம்.டி.பி.நாகராஜ் பெற்றுள்ளார். 

இவர் 2016-17 ஆம் ஆண்டில் ரூ.104 கோடிக்கு வருமான வரி செலுத்தியுள்ளார். இந்த ஆண்டில் அவரது மனைவி உள்பட குடும்பத்தினர் சார்பில் ரூ.157 கோடி வருமானவரி செலுத்தியுள்ளனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடக காங்கிரஸ் நிதிக்கான முதுகெலும்பாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com