இந்தியா - தென் கொரியா இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - தென் கொரியா இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகின. பொருளாதாரம், வர்த்தக நடவடிக்கைகள், ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில்
தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரதமர் மோடி, தென் கொரிய அதிபர் மூன் ஜே - இன்.
தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரதமர் மோடி, தென் கொரிய அதிபர் மூன் ஜே - இன்.

இந்தியா - தென் கொரியா இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகின. பொருளாதாரம், வர்த்தக நடவடிக்கைகள், ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அவற்றில் முக்கியமானவையாகும்.
முன்னதாக, பிரதமர் மோடியும், தென் கொரிய அதிபர் மூன் ஜே - இன்னும் செய்தியாளர்களை தில்லியில் சந்தித்தனர். அப்போது, கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று மோடி தெரிவித்தார்.
அணுஆயுதப் பரவல் நடவடிக்கைகளில் பாகிஸ்தானுடன் வடகொரியா தொடர்பு வைத்திருக்கும் நிலையில், அதனை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.
தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியும், அவரும் இணைந்து பங்கேற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தில்லியில் இரு தலைவர்களும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது சில முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்தனர்.
இந்தியா - வட கொரியா இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் அவற்றில் பிரதானமாக இருந்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளின் சார்பிலும் தொலைநோக்குத் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
வரும் காலங்களில் இரு தரப்பும் எந்தெந்த துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது? எத்தகைய நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை நல்குவது? என்பன தொடர்பான விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. முக்கியமாக, அண்டை நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை சர்வதேச விதிகளுக்குட்பட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தென் சீனக் கடல்பகுதியில், தங்களது நாட்டு கடற்படை கப்பல்களை சட்டவிரோதமாக சீனா நிறுத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அந்த விவகாரத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையிலே அந்த வாசகங்கள் தொலைநோக்குத் திட்டத்தில் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
முன்னதாக, இந்தியா - தென் கொரியா இடையே 10 ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை 2030-க்குள் 5,000 கோடி டாலர்களாக (சுமார் ரூ.3.25 லட்சம் கோடி) உயர்த்துவது தொடர்பான ஒப்பந்தம் அவற்றில் குறிப்பிடத்தக்கது.
சாம்சங் உள்ளிட்ட கொரிய நிறுவனங்களின் செல்லிடப்பேசி ஆலைகள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று வேறு சில முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளை பரஸ்பரம் மேற்கொள்வதன் மூலம் அந்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியும் என இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இதைத் தவிர, பாதுகாப்புத் துறை, ரயில்வே, மருத்துவம், தகவல் - தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, இணையவழிக் குற்றத் தடுப்பு உள்ளிட்ட துறைகளிலும் இணைந்து செயல்ப டுவதற்கான உடன்படிக்கையை இந்தியாவும், தென் கொரியாவும் மேற்கொண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com