தாஜ்மஹாலை மீட்டெடுங்கள் அல்லது இடித்துத் தள்ளுங்கள்: உச்ச நீதிமன்றம் ஆவேசம் 

சுற்றுச் சூழல் சீர்கேடுகளில் இருந்து தாஜ்மஹாலை மீட்டெடுங்கள் அல்லது இடித்துத் தள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்துள்ளது.
தாஜ்மஹாலை மீட்டெடுங்கள் அல்லது இடித்துத் தள்ளுங்கள்: உச்ச நீதிமன்றம் ஆவேசம் 

புது தில்லி: சுற்றுச் சூழல் சீர்கேடுகளில் இருந்து தாஜ்மஹாலை மீட்டெடுங்கள் அல்லது இடித்துத் தள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்துள்ளது.

தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் காற்று மாசு மற்றும் மரங்களை அழித்தல் உள்ளிட்ட செய்கைகளினால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து, தாஜ்மஹாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லியைச் சேர்ந்த சூழலியாளார் மேத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணைகளின் பொழுது தாஜ்மஹாலை பாதுகாக்க எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,மேலும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும்  உத்தர பிரதேச மாநில அரசு, மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி இருந்தது. ஆனால் அது தொடர்பாக போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சுற்றுச் சூழல் சீர்கேடுகளில் இருந்து தாஜ்மஹாலை மீட்டெடுங்கள் அல்லது இடித்துத் தள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்துள்ளது.

புதனன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி மதன் லோகூர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் கூறியதாவது:

தாஜ்மஹாலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக உங்களுக்கு இல்லை. தாஜ்மஹாலை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். ஒன்று நாங்கள் அதனை மூட உத்தரவிடுகிறோம் அல்லது நீங்கள் மீட்டெடுங்கள் அல்லது இடித்துத் தள்ளி விடுங்கள்.

வெறும் தொலைக்கட்சி கோபுரம் போல் இருக்கும் பாரிஸின் ஈபிள் டவரை பார்வையிட ஆண்டுக்கு 80 லட்சம் பேர் செல்கின்றனர். ஆனால் நமது தாஜ்மஹால் அதனை விட அழகானது. அதனை நீங்கள் ஒழுங்காக கவனித்துக் கொண்டால் உங்களது அந்நிய செலாவணி பிரச்னையே தீர்ந்து விடும்.       

உங்களது அலட்சியத்தால் நாட்டுக்கு எத்தனை பெரிய இழப்பு என்பதனை உணர்கிறீர்களா?

வரும் 31-ஆம் தேதி முதல் இந்த வழக்கினை தினசரி அடிப்படையில் விசாரிக்க உள்ளோம். அப்பொழுது இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

அத்துடன் ஆக்ரா, பிரோசாபாத், மதுரா, ஹத்ராஸ், உபியின் இதா மற்றும் ராஜஸ்தானின் பரத்புர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய 'தாஜ்மஹால் சரிவக மண்டலம்'  அமைப்பின் தலைவர் நேரடியாக ஆஜராகி, அந்த பகுதியில் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யக் கூடாது என்ற இந்த நீதிமன்ற ஆணைக்கு எதிராக நடந்த விதிமீறல்களை பற்றி எடுத்துரைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களதுஉத்தரவில் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com