பெண்களும் சபரிமலையில் வழிபடலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
பெண்களும் சபரிமலையில் வழிபடலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Updated on
3 min read

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. "குறிப்பிட்ட வயது பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாரபட்சம்; இது ஹிந்து பெண்களுக்கான உரிமை மறுப்பு' என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

5 நீதிபதிகளில் நான்கு பேர், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாலும், அமர்வில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும், மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதில், "இந்த விஷயம் ஆழ்ந்த மத நம்பிக்கையுடன் தொடர்புடையது. இந்த விஷயத்தை ஆண், பெண் பாகுபாடு என்ற நோக்கில் அணுகக் கூடாது' என்று அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு கால நடைமுறை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுமார் 10 முதல் 50 வயதிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற வழக்கம் நூற்றாண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இந்த விஷயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பெண்கள் அமைப்பினர் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தாலும், தீவிர மத நம்பிக்கையாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹிந்து மத பாரம்பரியம் குறிவைத்து தாக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

1990-ஆம் ஆண்டில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. எனினும், அப்போது கேரள நீதிமன்றம், கோயிலுக்கு செல்வதற்கான வயது கட்டுப்பாட்டை உறுதி செய்தது. பின்னர்,  2006-ஆம் ஆண்டு  இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினர் சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 13-இல் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பது பாகுபாடு ஆகாதா? அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாதா? என்பது உள்ளிட்ட 5 கேள்விகளை நீதிபதிகள் பதிவு செய்திருந்தனர். இந்த கேள்விகள் குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்து, அரசியல் சாசன அமர்வுக்கு மனுக்களை நீதிபதிகள் பரிந்துரை செய்திருந்தனர்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு...: இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ச்சியாக 8 நாள்கள் விசாரணை நடத்தியது. இதையடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி ஒத்திவைத்திருந்தனர். அதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர். அதே நேரத்தில் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.

பெண்களையும் அனுமதிக்க வேண்டும்: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது சார்பிலும் நீதிபதி கான்வில்கர் சார்பிலும் 95 பக்க தீர்ப்பை எழுதினார். அதில், "மதவழிபாடு என்பதில் எவ்வித பாகுபாடும் காட்ட கூடாது. முக்கியமாக மதவழிபாட்டில் ஆண், பெண் பாகுபாடும் இருக்கக் கூடாது. ஐயப்ப பக்தர்களிடம் எவ்வித வேறுபாடும் இருக்கக் கூடாது. வயதைக் காரணம் காட்டி பெண்களுக்கான மத வழிபாட்டு உரிமை தடுக்கப்படக் கூடாது. கேரளத்தில், பெண்களுக்கு உடல்ரீதியான காரணத்தைக் கூறி இதுவரை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பெண்களை கடவுள்களாக மதிக்கும் நாட்டில், அவர்களை பலவீனமாகக் கருதக் கூடாது. சபரிமலையில் பின்பற்றி வரும் நடைமுறை கட்டாயமானதல்ல' என்று கூறப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம்: நீதிபதி நாரிமன் தனது தீர்ப்பில், "10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை சபரிமலை கோயிலில் அனுமதிக்க மறுப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26-இன் படி ஏற்புடையதல்ல. கேரள ஹிந்து மத வழிபாட்டு நுழைவு விதிகள் சட்டம் -1965, அரசமைப்புச் சட்டப்படி பெண்களுக்கு உள்ள உரிமையை மறுப்பதாக உள்ளது. எனவே அதனை ரத்து செய்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

"பெண் என்பதற்காக அவரது வழிபாட்டு உரிமையை மறுப்பது, மனித கண்ணியத்துக்கு எதிரானது. மத விஷயத்தில் இதுபோன்ற பாகுபாடுகள் கூடாது. மதம் சாராத ஒரு காரணத்துக்காக பல நூறாண்டுகளாக இந்த பாகுபாடு நிலவி வந்துள்ளது. உடல்ரீதியான விஷயத்தை முன்வைத்து மத வழிபாட்டு இடத்தில் அனுமதி மறுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதுதான்' என்று நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
முன்னதாக, வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசின் சார்பில் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி அளிக்கப்பட்ட பதிலில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதை ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: தந்திரி கண்டரரு ராஜீவரரு 

கொச்சி, செப். 28: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக அக்கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரரு தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக சபரிமலை கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. எனினும், தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். தற்போதைய நிலையில் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்வம் போர்டு மேற்கொள்ள வேண்டியுள்ளது' என்றார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா: "முக்கியமாக மதவழிபாட்டில் ஆண், பெண் பாகுபாடும் இருக்கக் கூடாது. பெண்களை கடவுள்களாக மதிக்கும் நாட்டில், அவர்களை பலவீனமாகக் கருதக் கூடாது. '

நீதிபதி நாரிமன்:  "10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை சபரிமலை கோயிலில் அனுமதிக்க மறுப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26-இன் படி ஏற்புடையதல்ல '

நீதிபதி சந்திரசூட்: "பெண் என்பதற்காக அவரது வழிபாட்டு உரிமையை மறுப்பது, மனித கண்ணியத்துக்கு எதிரானது. மத விஷயத்தில் இதுபோன்ற பாகுபாடுகள் கூடாது. உடல்ரீதியான விஷயத்தை முன்வைத்து மத வழிபாட்டு இடத்தில் அனுமதி மறுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதுதான்'

நீதிபதி இந்து மல்ஹோத்ரா: "உடன்கட்டை ஏறுதல் (சதி) போன்ற சமூக தீங்கான பிரச்னைகள் தவிர்த்து, இதர மத நடைமுறைகளில் நீதிமன்றம் முடிவெடுக்கக் கூடாது; ஆழ்ந்த மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றங்களின் தலையீடு கூடாது'. (சபரிமலை விவகாரத்தில் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.)

பந்தளம் அரச குடும்ப உறுப்பினர் சசி குமார் வர்மா: ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பாரம்பரியம், வழிபாட்டு நடைமுறைகள் உள்ளன. சபரிமலை நடைமுறையை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மாற்றியிருப்பது வேதனையளிக்கிறது.

தேவஸ்வம் போர்டு உறுப்பினர் கே.பி.சங்கர தாஸ்: இந்த விவகாரத்தில், கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக வேறொரு நிலைப்பாட்டை தேவஸ்வம் போர்டு எடுக்க வாய்ப்பில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com