அதிக வேட்பாளர்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள்: கின்னஸ் சாதனை படைக்குமா நிசாமாபாத் தொகுதி?

அதிக வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தெலங்கானாவின் நிசாமாபாத் தொகுதி கின்னஸ் சாதனை முயற்சியில் இடம்பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிக வேட்பாளர்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள்: கின்னஸ் சாதனை படைக்குமா நிசாமாபாத் தொகுதி?

அதிக வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தெலங்கானாவின் நிசாமாபாத் தொகுதி கின்னஸ் சாதனை முயற்சியில் இடம்பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் நிசாமாபாத் மக்களவைத் தொகுதியில் விவசாயிகள் உட்பட 185 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் கூறியதாவது:

நிசாமாபாத் தொகுதி வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாதிரி வாக்குப்பதிவு நடைபெற கூடுதல் நேரமானதால் ஒருமணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு மொத்தம் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

எனவே ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம்பெறுவது இதுவே முதன்முறை எனவே இந்த முயற்சியை கின்னஸ் சாதனை குழுவுக்கு தெரியப்படுத்தியுள்ளோம் என்றார்.

நிசாமாபாத் தொகுதியிலுள்ள 1,778 வாக்குச்சாவடிகளிலும் தலா 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் இடம்பெற்றுள்ளது. வாக்குச்சாவடிகளில் ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சம் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே இணைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சம் 64 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் மட்டுமே இடம்பெற முடியும் என்ற சூழலில் இங்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த முதலில் பரிசீலிக்கப்பட்டது. இருப்பினும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப் ஆஃப் இந்தியா லிமிட். உதவியுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பெல் மற்றும் இசிஐஎல் குழுமங்களைச் சேர்ந்த 600 பொறியாளர்களின் கடின உழைப்புடன் இம்முயற்சி நிறைவேற்றப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதலாக 2 அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், வாக்காளர்கள் எளிதில் அடையாளம் காணும் விதமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அந்தந்த வேட்பாளர்களின் புகைப்படம், பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டன.  

மொத்தம் 15 லட்சத்து 53 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட நிசாமாபாத் மக்களவைத் தொகுதியில் 3 லட்சத்து 73 ஆயிரம் விவசாய வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com