கௌதம் கம்பீர், விஜேந்தர் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஷீலா தீட்சித் இப்பதான் காரே வாங்கினாராம்!

3 முறை தில்லி முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஷீலா தீட்சித், தன்னிடம் ஒரேயொரு கார் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டார். 
கௌதம் கம்பீர், விஜேந்தர் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஷீலா தீட்சித் இப்பதான் காரே வாங்கினாராம்!

முன்னாள் இந்திய அணி கேப்டன் கௌதம் கம்பீர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில், தில்லியை பூர்வீகமாகக் கொண்ட கௌதம் கம்பீருக்கு கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியை பாஜக ஒதுக்கியது. இதையடுத்து அவர் அந்த தொகுதிக்கான வேட்புமனுவை செவ்வாய்கிழமை தாக்கல் செய்தார். அப்போது தனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 147 கோடி என்று வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ. 12.40 கோடி வருமானம் பெற்றதற்கான வருமானவரிச் சான்றையும் அதில் இணைத்துள்ளார். மேலும் அதே நிதியாண்டில் தனது மனைவி நடாஷா கம்பீரும் ரூ. 6.15 லட்சம் வருமானம் பெற்றுள்ளதாக அவருடைய வருமானவரிச்சான்றையும் குறிப்பிட்டுள்ளார். 

தன்னிடம் ஒரு பைக் மற்றும் 4 கார்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள கம்பீர், பரகம்பா சாலையிலுள்ள மார்டன் பள்ளியில் பயின்றதாகவும், பின்னர் ஹிந்து கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று பிரபல தொழில்முறை குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங், காங்கிரஸ் சார்பில் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் தன்னிடம் ரூ. 12.14 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். ரோடாக்கில் உள்ள தயானந்த் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதனிடையே, 3 முறை தில்லி முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஷீலா தீட்சித், தன்னிடம் மொத்தமே ரூ. 4.92 கோடி சொத்து தான் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அதிலும் தன்னிடம் ஒரேயொரு கார் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்துள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக, 2013 சட்டப்பேரவைத் தேர்தலின் போது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதை விட தற்போது ஷீலா தீட்சித்தின் சொத்து மதிப்பு ரூ. 2.1 கோடி உயர்ந்துள்ளது, அதிலும் அச்சமயம் தன்னிடம் கார் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com