
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் எவராலும் நாட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
"பிரதமராகிவிடலாம் என்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் பகல் கனவு காண்கின்றனர்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில், அமித் ஷாவும் எதிர்க்கட்சிகளை விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூரில் வியாழக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்துள்ள மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் விரக்தியில் உள்ளனர்.
ஏனெனில், இவர்கள் தேசத்தின் பாதுகாப்பு குறித்து பேச மட்டுமே செய்வார்கள். செயலில் எதுவும் இருக்காது. ஆனால், பாஜக அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயங்கரவாதிகள் நம்மை ஒருமுறை தாக்கினால், அவர்கள் திரும்பி எழ முடியாத அளவுக்கு அடிப்பதே வலிமையான அரசுக்கு உதாரணம். அப்படிப்பட்ட அரசாக இப்போதைய மத்திய அரசு திகழ்கிறது.
தேசப்பாதுகாப்பு விஷயத்தில் பாஜக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.
பாகிஸ்தானில் இருந்து நம்மை நோக்கி ஒரு தோட்டா வந்தால் கூட, அவர்களை நோக்கி குண்டுகள் வீசப்படும்.
காங்கிரஸ் உள்பட வேறு எந்த எதிர்க்கட்சித் தலைவராலும் நாட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாது.
பாகிஸ்தானில் நமது விமானப்படை தாக்குதல் நடத்திய தாக்குதலால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்துதான் ராகுல், மாயாவதி, அகிலேஷ் ஆகியோர் அதிகம் கவலைப்பட்டனர்.
தேச துரோகச் சட்டத்தை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
இதன் மூலம் தேச துரோகச் செயல்களுக்கு அங்கீகாரம் அளிக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் தேசவிரோத கோஷங்களை அதிகரிக்கவும் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்று அமித் ஷா குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.