
உன்னாவ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு மற்றும் விபத்து வழக்கு விசாரணைகளை உ.பி.யில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது.
இந்த நிலையில், நண்பகல் 12 மணியளவில் உன்னாவ் வழக்கு விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தெரிவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பலாத்கார சம்பவத்தில் சிறையில் உள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் 10 பேருக்கு எதிராக உத்தரப் பிரதேச போலீஸார் திங்கள்கிழமை கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னதாக,
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் இளம்பெண் அனுப்பிய கடிதத்தை கவனத்துக்கு கொண்டு வராதது ஏன் என்று தனது செயலரிடம் உச்சநீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு பாதிக்கப்பட்ட இளம்பெண் கடிதம் அனுப்பியிருந்தார். எனினும், அவர் சென்ற கார் சில தினங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, உச்சநீதிமன்றம் இந்தக் கடிதத்தை கவனத்தில் கொள்ளவில்லை என்று சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை வந்தது. அப்போது, இந்தக் கடிதம் எனது கவனத்துக்கு வரவில்லை. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் செயலர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விபத்து தொடர்பாக உத்தரப் பிரதேச அதிகாரிகளும் வியாழக்கிழமைக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.