இந்திய வரலாற்றில் கருப்பு தினம்: காங்கிரஸ் தாக்கு

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது இந்திய வரலாற்றில் கருப்பு தினமாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
அமித் ஷா கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். உடன், அக்கட்சியின் குலாம் நபி ஆஸாத், சசி தரூர்,
அமித் ஷா கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். உடன், அக்கட்சியின் குலாம் நபி ஆஸாத், சசி தரூர்,
Updated on
2 min read


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது இந்திய வரலாற்றில் கருப்பு தினமாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.


இது தொடர்பாக அவர் தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது இந்திய வரலாற்றில் கருப்பு தினமாகும். இந்த விவகாரத்தில் அசட்டுத் துணிச்சலான காரியத்தில் அரசு ஈடுபடும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு பேரழிவான ஒரு நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான குலாம் நபி ஆஸாக் கூறுகையில், வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் அக்கட்சி விளையாடுகிறது என்றார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சண்டீகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு எடுத்துள்ள முடிவு அரசியல்சாசனத்துக்கு விரோதமானது. இதை அரசு இப்படி சரியாகத் திட்டமிடாமல் மேற்கொண்டிருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். 


ஒமர் அப்துல்லா எதிர்ப்பு: ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, இந்த விவகாரம் தொடர்பாக தெரிவித்ததாவது:
மத்திய அரசு எடுத்துள்ள தன்னிச்சையான, அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்துள்ளது. இது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது மக்கள் அதன் மீது வைத்த நம்பிக்கையை மீறிய செயலாகும். அரசின் இந்த முடிவால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும். அரசின் முடிவு மாநில மக்களுக்கு எதிரான படையெடுப்பாகும் என்றார் அவர்.
மெஹபூபா கண்டனம்: ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி இது தொடர்பாகக் கூறியது:
அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்யும் மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு சட்டவிரோதமானது. இந்த முடிவு ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவை ஆக்கிரமிப்பு சக்தியாக மாற்றிவிடும்.
இன்று இந்திய வரலாற்றின் கருப்பு தினமாகும். அரசு தற்போது எடுத்துள்ள முடிவின் மூலம் காஷ்மீருக்கு அளித்திருந்த வாக்குறுதியை இந்தியா மீறி விட்டது. இதனால் இந்திய துணைக் கண்டத்தில் பேரழிவை ஏற்படுத்தும் பின்விளைவுகள் ஏற்படும் என்று மெஹபூபா தெரிவித்தார்.


இடதுசாரிகள் தாக்கு: 370ஆவது பிரிவை ரத்து செய்யும் அரசின் மமுடிவை இடதுசாரிக் கட்சிகளும் விமர்சித்துள்ளன. இது தொடர்பாக இந்தியா கமம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், அரசு எடுத்துள்ளது பின்னடைவை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மக்கள் மேலும் அன்னியப்படுத்தப்படுவார்கள். அரசின் செயல் ஜனநாயகப் படுகொலை என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவிக்கையில், அரசின் நடவடிக்கை அரசியல்சாசனத்தின் மீதான தாக்குதல் என்று விமர்சித்துள்ளது.


ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு: 370ஆவது பிரிவை ரத்து செய்யும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 
தன் கட்சி எம்.பி.க்களின் இச்செயலை ஆதரித்து ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறுகையில், ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோஹர் லோஹியா, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு எங்கள் கட்சி செயல்படுகிறது. 
370ஆவது பிரிவை மாற்றக் கூடாது என்றே இந்தத் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இப்பிரிவை நீக்குவது என்பது பாஜகவின் செயல்திட்டம்தானே தவிர தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்திட்டம் அல்ல. எனவே இதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com