370 சட்டப்பிரிவு ரத்து: நாடே சலசலத்தாலும் இதுவரை காஷ்மீர் மக்களுக்கு எதுவுமே தெரியாது!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக மாநிலங்களவையில் இன்று அறிவிக்கப்பட்டது.
370 சட்டப்பிரிவு ரத்து: நாடே சலசலத்தாலும் இதுவரை காஷ்மீர் மக்களுக்கு எதுவுமே தெரியாது!
Published on
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக மாநிலங்களவையில் இன்று அறிவிக்கப்பட்டது.

இதனால் நாடு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

ஆனால், இது எதுவும் காஷ்மீர் மக்களுக்கு இதுவரை தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஏன் என்றால், காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா? செல்போன் சேவை, இணையதள சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அவ்வளவு ஏன், இந்த செய்தியை வீட்டின் தொலைக்காட்சிப் பெட்டி வாயிலாகக் கூட அம்மாநில மக்கள் அறிந்து கொள்ள முடியாத வகையில் கேபிள் டிவி இணைப்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக காஷ்மீர் மாநிலத்தின் மீது ஏற்படுத்தப்பட்டிருந்த ஒருவித அழுத்தம் ஏன் என்பது குறித்து இன்று நாட்டு மக்களுக்கு மட்டுமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இன்னும் காஷ்மீர் மக்கள் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்துத்தான் அச்சத்தில் ஆழ்ந்து கிடப்பார்கள்.

மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வந்த நடவடிக்கைகள், காஷ்மீர் மக்களை பல்வேறு சந்தேகங்களுக்கு ஆட்படுத்தியது. இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடிய போதும் கூட காஷ்மீரில் என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது என்பதற்கான எந்த துப்பும் துலங்கவில்லை, மாநிலங்களவையில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த போதுதான் எவ்வளவு பெரிய முடிவை மோடி அரசு எடுத்திருக்கிறது என்பது விளங்கியது.

இந்த முடிவுக்கு எதிராக மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டாலும், தங்களது தலையெழுத்து எந்த அளவுக்கு மாறப் போகிறது என்பதை இன்னமும் கூட காஷ்மீர் மக்கள் தெரிந்திருக்க மாட்டார்கள் என்றே கருதப்படுகிறது.

கடந்த 10 நாட்களாக உச்சபட்ச எச்சரிக்கையில் வைக்கப்பட்டிருக்கும் காஷ்மீர், இன்னும் எத்தனை நாட்களுக்கு அதே நிலையில் நீடிக்கும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும்.

ஆனால், இதில் சம்பந்தமே இல்லாமல், பயங்கரவாத அச்சுறுத்தல் என்று கூறி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அமர்நாத் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உணவு மற்றும் மருந்து பொருட்களை வாங்கிக் வைத்துக் கொண்டனர்.

நாட்டுக்கே தெரிந்த அந்த செய்தி காஷ்மீரி மக்களுக்கு என்று தெரியவரும்? நாளையா??
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com