நேரு தாக்கல் செய்த மனுவை, மோடி திரும்பப் பெற வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

​காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையீடு கோரி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தாக்கல் செய்த மனு, சட்ட விரோதமானது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையீடு கோரி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தாக்கல் செய்த மனு, சட்ட விரோதமானது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நேற்று (திங்கள்கிழமை) நீக்கியது. இந்த விவகாரம், ஜம்மு காஷ்மீர் மற்றும் அதன் சிறப்பு அந்தஸ்தை நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 

இந்த நிலையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா தலையீடு கோரி நேரு தாக்கல் செய்த மனு சட்ட விரோதமானது என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து, அவர் டிவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது, 

"காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையீடு கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேரு தாக்கல் செய்த மனுவை மோடி அரசு தற்போது திரும்பப் பெறவேண்டும். அந்த மனு அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டதால் அது சட்ட விரோதமானது" என்றார். 

இதையடுத்து, சுப்பிரமணியன் சுவாமி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், 

"ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியினரால் சைஃபுதின் சோஸ் மகள் கடத்தப்பட்ட விவகாரத்தை நான் கையாண்டதால் காஷ்மீர் தொடர்பான ஆவணங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த மனு வெளியுறவுத் துறை அமைச்சர் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கு நேருவிடம் அமைச்சரவை ஒப்புதல் கிடையாது. அதனால், இது சட்ட விரோதமானது. 

இந்த மனுவை சர்தார் படேல் தடுத்து நிறுத்தியிருப்பார். இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், இதில் மேற்கொண்டு தீர்மானிப்பதற்கு எதுவும் கிடையாது என்பதை அவர் தெளிவுபடுத்திவிட்டார். 

இந்த மனுவானது நீர்த்துப் போன கடிதம். இந்த மனுவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து உரிமையும் அதற்குப் பிந்தைய அரசுகளுக்கு உள்ளது. ஐ.நா. உத்தரவிட்டதை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. எனவே, ஜம்மு காஷ்மீரில் ஒருபோதும் பொது வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்பதற்கு இது இரண்டாவது உதாரணமாகும்" என்றார்.

முன்னதாக, இந்தியா, பாகிஸ்தான் இடையே 1948-இல் முதல் போர் தொடங்கியபோது, அப்போதைய பிரதமர் நேரு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மனுத் தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வதற்காக ஐ.நா. ஆணையம் என்று ஒரு ஆணையத்தை பாதுகாப்பு கவுன்சில் அமைத்தது. பிரதமர் நேருவின் அமைச்சரவையில் சர்தார் படேல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். இவர் 1950-இல் காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com