
கேரளாவில் பெய்து வரும் தென் மேற்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் இம்மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கன மழை எச்சரிக்கை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, குமுளி, முல்லைப் பெரியாறு பகுதிகளிலும் நேற்று கன மழை பதிவாகியுள்ளது.
ஆர்ப்பரித்துச் செல்லும் பம்பை ஆற்று வெள்ளத்தால் சபரிமலை ஐயப்பனைக் காண வந்த பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். மாதாந்திர பூஜையில் கலந்துகொண்டுவிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பெரும்பாலான பக்தர்கள் தவித்து வருகின்றனர். பம்பையில் இருந்து அருகில் உள்ள முக்கிய ஊர்களுக்குச் செல்லும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஆலப்புழா - எர்ணாகுளம் இடையேயான தண்டவாளப் பகுதியில் மரங்கள் விழுந்ததால் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ரயில்கள் அனைத்தும் கோட்டயம் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது.
இடுக்கி அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. புதன்கிழமையன்று அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் 71.20 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
ரெட் அலர்ட்:
இதற்கிடையே, வியாழக்கிழமையன்று திரிசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளியன்று இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அல்ர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இடுக்கி மற்றும் கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.