அந்த நள்ளிரவில் என்ன நடந்தது? இன்னும் உயிருடன் இருக்கிறேனா? அதிர்ச்சியில் இருந்து மீளாத இளைஞர்

கேரள மாநிலம் பனன்காயம் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் சுனில்குமாரை எக்ஸ்பிரஸ் குழுவினர் சந்தித்த போது அவரது முகத்தில் அதிர்ச்சியும் பயமும் மழை வெள்ளம் போல தேங்கியிருந்தது.
அந்த நள்ளிரவில் என்ன நடந்தது? இன்னும் உயிருடன் இருக்கிறேனா? அதிர்ச்சியில் இருந்து மீளாத இளைஞர்
Published on
Updated on
1 min read


கவலப்பாரா: கேரள மாநிலம் பனன்காயம் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் சுனில்குமாரை எக்ஸ்பிரஸ் குழுவினர் சந்தித்த போது அவரது முகத்தில் அதிர்ச்சியும் பயமும் மழை வெள்ளம் போல தேங்கியிருந்தது.

அவர் இதுவரை கண்டிருக்கும் கொடுங்கனவுகளில் கூட இதுபோன்ற ஒரு நாளை அவர் சந்திப்பார் என்று நினைத்திருக்க மாட்டார். 

இவர்தான், கவலப்பாராவில் வெள்ளிக்கிழமை 58 பேர் மரணத்துக்குக் காரணமாக அமைந்த நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தவர்களில் ஒருவர். இதுபோன்றதொரு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தான் உயிர் பிழைப்பேன் என்று அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 

இதுபற்றி அவரே விவரிக்கிறார்.. சம்பவம் நடந்த போது நான் என் வீட்டில் இருந்தேன். வெளியே கன மழை பெய்து கொண்டிருந்தது. சுமார் இரவு 8 மணி இருக்கும். பயங்கர சத்தம் கேட்டது. டார்ச் விளக்கோடு நான் வெளியே வந்தேன். கன மழை காரணமாக வெளியே இருட்டில் எதுவுமே தெரியவில்லை. என் வீட்டுக்கு முன்னால் இருந்த ஒரு சிறிய கால்வாயில் மழை வெள்ளத்தோடு சேறும் கலந்து சென்று கொண்டிருந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்று அப்போது நான் நினைத்தேன். ஆனால், எச்சரிக்கை கொடுக்கலாம் என்று நினைத்தபோது யாருமே வெளியே இல்லை. அன்று காலை எழுந்து பார்த்தபோது என் பக்கத்து வீடுகள் அனைத்தும் சேற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டிருந்தது. சுமார் 19 வீடுகள் இருந்த இடம் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்திருந்தது என்கிறார் 39 வயது இளைஞர்.

இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கடந்த ஆண்டே அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு நடந்த மண் பரிசோதனையில் மண் பலமாக இருப்பதாகக் கூறிவிட்டனர். அதை மக்கள் நம்பித்தான் இந்த கடுமையான மழை வெள்ளத்திலும் வேறு எங்கும் செல்லாமல், செல்வதைப் பற்றிக் கூட சிந்திக்காமல் இருந்துவிட்டனர் என்கிறார் அவர்.

எங்கள் அக்கம் பக்கத்து வீட்டினர் எல்லாம் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்று நினைக்கவேயில்லை. அதிர்ஷ்டவசமாக எங்கள் வீடு மட்டும் அதில் இருந்து தப்பி நின்றது என்கிறார் சுனில்குமார் கவலையும், அதிர்ச்சியும், அதனூடே தனக்கிருந்த ஒரு சின்ன அதிர்ஷ்டத்தையும் நினைத்தபடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com