
மருந்து வாங்குவதற்காக 30 ரூபாய் கேட்ட முஸ்லீம் பெண் ஒருவரை 'தலாக்' கூறி அவரது கணவர் விவாகரத்து செய்துள்ள விநோத சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த கணவன்மார்கள், தங்களது மனைவிகளுக்கு மூன்று முறை 'தலாக்' கூறி விவாகரத்து செய்யும் முறை வழக்கத்தில் இருந்து வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு, முத்தலாக் தடுப்புச் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருந்த நிலையிலும், தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹப்பூர் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் பெண் ஒருவர் தனது கணவரிடம், மருந்து வாங்குவதற்காக ரூ.30 கேட்டுள்ளார். ஆனால் கணவர் கொடுக்க மறுத்ததுடன் மனைவியிடம் சத்தமிட்டுள்ளார். தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே, மனைவிக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். மேலும், கணவரின் குடும்பத்தார் அந்த பெண்ணை வற்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக அந்த பெண் ஹப்பூர் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண்ணின் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட டிஜிபி தெரிவித்துள்ளார்.
முத்தலாக் தடுப்பு சட்ட மசோதாவில், தலாக் கூறி விவாகரத்து செய்யும் முஸ்லீம் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.