சாதனை படைக்கும் மோடியின் கனவுத் திட்டம்: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டிய ஜன் தன் யோஜனா டெபாசிட் தொகை!

ஜன் தன் திட்டத்தின் கீழ் 20 முதல் 65 வயதிற்குட்பட்ட மக்கள், தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கிகளில், ஆதார் அடையாள அட்டையை கொண்டு வங்கிக்கணக்கை தொடர முடியும். தொடங்கப்படும். 
சாதனை படைக்கும் மோடியின் கனவுத் திட்டம்: ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டிய ஜன் தன் யோஜனா டெபாசிட் தொகை!
Published on
Updated on
2 min read

பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்றான ஜன் தன் வங்கி திட்டத்தில் இருப்புத் தொகை ரூ. 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து, மக்களின் ஆதரவுடன் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக ஆன்லைன் பணபரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம், நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகமான மக்கள்  இத்திட்டத்தினால் பயனடைவதையடுத்து, திட்டம் கால வரையற்ற நீட்டிப்பு செய்யப்பட்டது.

ஜன் தன் திட்டத்தின் கீழ் 20 முதல் 65 வயதிற்குட்பட்ட மக்கள், தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கிகளில், ஆதார் அடையாள அட்டையை கொண்டு வங்கிக்கணக்கை தொடர முடியும். தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்களுக்கு ரூபே ஏடிஎம் அட்டை, தேவைப்படும் பட்சத்தில் காசோலை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும், விபத்து காப்பீடு, ஓய்வூதியம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் புதிய கணக்குகளுக்கு விபத்து காப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஜன் தன் வங்கிக்கணக்கு குறித்து அவர் விபரங்களை கேட்டிருந்தார்.

அதன்படி, மத்திய நிதித்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை 17ம் தேதி வரை 36.25 கோடி மக்கள் ஜன் தன் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். மேலும், இத்திட்டத்தில் உள்ள வங்கிக்கணக்குகளின் மொத்தத் தொகையாக 1,00,831 கோடி ரூபாய்  கணக்கில் உள்ளது. மேலும், மொத்த வங்கிக்கணக்குகளில் 14% (4.99 கோடி வங்கிக்கணக்குகள்) கணக்குகளில் வங்கி இருப்புத்தொகை பூஜ்ஜியமாக உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பணபரிவத்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது. அதில், ஜன் தன் திட்டத்தில் அதிக பயனாளர்கள் பயன்பெற்றதையடுத்து, இத்திட்டம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com