
சம்ஸ்கிருதம் ஒரு விஞ்ஞான அறிவியல் மொழி என்பது குறித்து ஐஐடி மற்றும் என்ஐடி-களில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால், இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஐஐடி மற்றும் என்ஐடி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவரிடம் ஒரு முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதில், சம்ஸ்கிருதம் விஞ்ஞான அறிவியல் மொழி எனவும் கணினியில் உபயோகப்படுத்த சிறந்த மொழி எனவும் நிரூபிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளவும், எதிர்காலத்தில் பேசும் கணினிகள் என்று வந்தால், அதற்கு சம்ஸ்கிருத மொழி மட்டுமே சாத்தியமாகும் என்பதை உறுதி செய்யவும் கோரியுள்ளார்.
மேலும் பேசிய அவர், 'சம்ஸ்கிருதம் அறிவியல் மொழி என்பதை அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஏற்றுக்கொண்டுள்ளது. ஏனென்றால், அதன் எழுத்து வடிவமும், பேச்சு வடிவமும் நன்றாக ஒத்துப்போகிறது. நாசாவே அதை ஒத்துக்கொண்டுள்ள போது, இந்தியாவில் அதனை கொண்டு வர என்ன பிரச்னை இருக்கப் போகிறது? அனைத்துக் கோள்களில் உள்ள மொழிகளுக்கும் தலையாய மொழி சம்ஸ்கிருதம் மட்டுமே.
வேதங்கள் மற்றும் புராணங்கள் சம்ஸ்கிருத மொழியிலே எழுதப்பட்டுள்ளன. எனவே, சம்ஸ்கிருதத்தை விட பழமையான மொழி ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்' என்றார்.
அதேபோன்று முன்னதாக ஐஐடி மும்பையில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர், 'புவியீர்ப்பு விசை குறித்து ஐசக் நியூட்டன் கண்டுபிடித்ததற்கு முன்னரே இந்து புராணங்களில் அதுகுறித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளது. அதுபோன்று அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளை முதலில் கண்டுபிடித்த பெருமை ரிஷி பிரணவைச் சாரும்' என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, 'அனைத்து இந்திய மொழிகளையும் நாம் வலுப்படுத்த வேண்டும். ஆனால், மக்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு சிறந்த மொழியாக ஹிந்தி இருக்கும். அதன் காரணமாகவே, தேசிய மொழியாக ஹிந்தி இருந்து வருகிறது' என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.