உன்னாவ் பெண் கார் விபத்து: வழக்கை விசாரிக்க சிபிஐக்கு 2 வார காலம் கூடுதல் அவகாசம்

உன்னாவ் பெண் வந்த கார் விபத்துக்குள்ளானது குறித்து வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐக்கு கூடுதலாக 2 வார காலம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உன்னாவ் பெண் கார் விபத்து: வழக்கை விசாரிக்க சிபிஐக்கு 2 வார காலம் கூடுதல் அவகாசம்


புது தில்லி: உன்னாவ் பெண் வந்த கார் விபத்துக்குள்ளானது குறித்து வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐக்கு கூடுதலாக 2 வார காலம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த உன்னாவ் பெண்ணின் வழக்குரைஞரின் மருத்துவ செலவுக்காக உத்தரப்பிரதே அரசு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் பெண் மற்றும் அவரது வழக்குரைஞரிடம் வாக்குமூலம் இன்னமும் பதிவு செய்யப்படாததால், வழக்கு விசாரணையை முடிக்க 4 வார கால அவகாசம் அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 2 வார கால அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் கடந்த 2017-ஆம் ஆண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சித்ததை அடுத்து, குல்தீப் செங்கரை கட்சியில் இருந்து பாஜக நீக்கியது.

இந்த வழக்கு தொடர்பாக, குல்தீப் செங்கரிடம் கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. 

மேலும், அவரது உதவியாளர் சசி சிங் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும், பாலியல் வன்கொடுமை, கடத்தல், திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்துதல், குற்றச்சதி, மிரட்டுதல் ஆகிய இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர், அவரது குடும்பப் பின்னணி, சாட்சிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடக் கூடாது என்று ஏற்கெனவே ஊடகங்களுக்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உன்னாவ் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணை (அப்போது சிறுமி), கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ஆம் தேதி, எம்எல்ஏ செங்கரின் வீட்டுக்கு உதவியாளர் சசி சிங் அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டில் அந்தப் பெண்ணை செங்கர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இதை வெளியில் யாரிடமாவது சொன்னால், அந்தப் பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக செங்கர் தரப்பு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அப்பெண் வந்த கார் மீது டிரக் மோதியதில், உடன் வந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். உன்னாவ் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குல்தீப் செங்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com