ப.சிதம்பரத்தை பழிவாங்குகிறாரா அமித் ஷா? 

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான 9 ஆண்டு கால பகையை பழித்தீர்க்கவே, அவரை கைது செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ப.சிதம்பரத்தை பழிவாங்குகிறாரா அமித் ஷா? 
Updated on
1 min read

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான 9 ஆண்டு கால பகையை பழித்தீர்க்கவே, அவரை கைது செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது, குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவி வகித்தார். அப்போது குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் இவருக்கு தொடர்பு உள்ளது என்று குஜராத் காவல்துறை தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் சாட்சியாக கருதப்பட்ட துளசிராம் பிரஜாபதி என்பவரும் தப்பி ஓட முயற்சி செய்ததாகக் கூறி, கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த இரண்டு வழக்குகளிலும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு உள்ளது என சி.பி.ஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தின் மூலமாக அது நிரூபணமும் ஆனது. இதனால் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் மூன்று மாதங்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அமித் ஷா கைது செய்யப்பட்டது கடந்த 2010ம் ஆண்டு. 

தற்போது, அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அதே சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக அவரை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து வந்த டெல்லி உயர்நீதிமன்றம் திடீரென அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளது. முன்ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின்  மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்து வருகிறது. 

மேலும், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட உடனேயே அவரை கைது செய்திருக்கலாம் அல்லது 2 மணி நேரம் அவகாசம் முடித்தவுடன் சிதம்பரத்தை கைது செய்திருக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகளிடம் அமித் ஷா கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அதேபோன்று, அமலாக்கத்துறை, நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ளதால், அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் இதுகுறித்து அமித் ஷா பேசியதாகத் தெரிகிறது.

இதனால், 9 ஆண்டுகளுக்கு பின்னர், பகையை மனதில் வைத்து தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமித் ஷா முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com