
புது தில்லி: தனக்கு விதிக்கப்பட்ட ஐந்து நாள் சிபிஐ காவலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தில்லியில் சிபிஐ அதிகாரிகளால் வியாழன் இரவு கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து, அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் ஈடுபட்டிருந்தன. எனினும், ப.சிதம்பரம் எங்கிருக்கிறார்? என்ற கேள்வி நிலவி வந்த சூழலில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இரவில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, தில்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து, அவரது வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், வீட்டின் வெளிக்கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததை அடுத்து, மதில் சுவரில் ஏறிக் குதித்து அதிகாரிகள் உள்ளே சென்றனர்.
பின்னர் பரபரப்பான சூழலில், ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சோதனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. காவல் முடிந்தவுடன் சிதம்பரத்தை வரும் திங்களன்று ஆஜர்படுத்த நீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஐந்து நாள் சிபிஐ காவலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.