
மாநிலங்களவை எம்.பி.யாக முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகியிருந்த பாஜக மாநிலத் தலைவர் மதன் லால் சைனி கடந்த ஜூன் மாதம் காலமானார். அதையடுத்து காலியான அந்தப் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக கடந்த 13-ஆம் தேதி மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இருந்ததால், மன்மோகன் சிங் வெற்றி பெறுவது உறுதியாக இருந்தது.
அதுமட்டுமின்றி, அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. அதையடுத்து இந்த இடைத்தேர்தலில் போட்டியின்றி மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவை செயலரும், தேர்தல் அதிகாரியுமான பிரமிள் குமார் மாத்தூர் வெளியிட்டார்.இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2019 வரை அஸ்ஸாமில் இருந்து தொடர்ந்து 5 முறை மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதில் 1998 முதல் 2004 வரை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்துள்ளார். 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரு முறை பிரதமராக அவர் பதவி வகித்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதியோடு அவரது எம்.பி. பதவிக்காலம் நிறைவுற்றது.
அஸ்ஸாம் சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்எல்ஏக்களின் பலம் இல்லாததால், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.