

கட்சிகளின் சின்னம் ஒரே மாதிரியாக இருப்பதால், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்களிலும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி அம்பு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
பிகாரில் ஜேடியு கட்சியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும், மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியும் மாநில கட்சிகளாக உள்ளன. சிவசேனையும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் தங்கள் மாநிலங்களில் வில்-அம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஐக்கிய ஜனதா தளம் கட்சி அம்பு சின்னத்தில் போட்டியிடுகிறது.
இதற்கு முன்பு, மகாராஷ்டிரத்திலும், ஜார்க்கண்டிலும் அம்பு சின்னத்திலேயே ஜேடியு போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து வந்தது.
இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேடியு கட்சி, அம்பு சின்னத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முறையிட்டது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சின்னமும், ஜேடியு கட்சியின் சின்னமும் ஒரே மாதிரியாக இருப்பதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படுவதாகவும் அக்கட்சி தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தேர்தல் சின்னங்கள் விதிகளின் படி, ஜேடியு கட்சி ஏற்கெனவே பெற்றுள்ள சலுகைப்படி அம்பு சின்னத்தை மகாராஷ்டிரத்திலும், ஜார்க்கண்டிலும் இனி பயன்படுத்த முடியாது.
கடந்த மார்ச் மாதம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், சிவசேனையும் தங்களது தேர்தல் சின்னங்களில் (வில்-அம்பு) பிகாரில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதே அடிப்படையில், ஜார்க்கண்டிலும், மகாராஷ்டிரத்திலும் அம்பு சின்னத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும், மகாராஷ்டிரத்தில் சிவசேனைக்கும் மட்டுமே வில் அம்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பிகாரில் போட்டியிடும் சிவசேனையும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், இதேபோல், மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஜேடியு கட்சியும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனி சின்னங்களில் போட்டியிடலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.