பொதுத்துறை வங்கிகள் இணைப்புகளால் வேலை இழப்பு ஏற்படாது: நிதி செயலாளர் பேட்டி

வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாகவும், பொதுத் துறை வங்கிகளை சர்வதேச தரத்துக்கு
பொதுத்துறை வங்கிகள் இணைப்புகளால் வேலை இழப்பு ஏற்படாது: நிதி செயலாளர் பேட்டி
Published on
Updated on
1 min read


பொதுத் துறை வங்கிகள் இணைப்புகளால் அதிக வேலைவாய்ப்புகள் பெருகும் என என்று நிதித் துறைச் செயலர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாகவும், பொதுத் துறை வங்கிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும் முயற்சியாகவும், வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். மத்திய அரசின் இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் வங்கி யூனியன் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக  கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நிதித் துறைச் செயலர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிகழாண்டின் தொடக்கத்தில், பாங்க் ஆஃப் பரோடாவுடன் தேனா வங்கியும், விஜயா வங்கியும் இணைக்கப்பட்டன. அதற்கு முன், பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள், பாரதிய மகிளா வங்கி ஆகியவை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதனால் எந்த ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

சிறிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறந்த வசதிகளையே வழங்கும். அவர்களுக்கு பணி இடமாறுதலுக்கான வாய்ப்புகளும் அதிகயளவில் கிடைக்கும். வங்கிகளை ஒன்றிணைப்பதால், கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்த 27 வங்கிகள் தற்போது 12 வங்கிகளாகக் குறையும். இந்த வங்கிகளுக்கு போதிய அளவில் மூலதன நிதி அளிக்கப்படும். நிகழ் நிதியாண்டிலேயே பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ. 70,000 கோடி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைய வேண்டும். அதனால் நாட்டில் பொதுத்துறை வங்கிகளை இணைப்பது என்பது கட்டாயம். ஒரு தூய்மையான மற்றும் பயனுள்ள வங்கி நடைமுறையை நீங்கள் பெற வேண்டும். எந்தவொரு பிரச்னை என்றாலும் அதற்கு தீர்வு காண அரசு உள்ளது என்றும் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com