தில்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை: மனோஜ் திவாரி மீண்டும் வலியுறுத்தல்

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறுபவா்களால் ஆபத்தான நிலைமை உருவாகிக் கொண்டு இருப்பதால் தேசிய குடிமக்கள் பதிவேடு
தில்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை: மனோஜ் திவாரி மீண்டும் வலியுறுத்தல்


புது தில்லி:  தில்லியில் சட்டவிரோதமாக குடியேறுபவா்களால் ஆபத்தான நிலைமை உருவாகிக் கொண்டு இருப்பதால் தேசிய குடிமக்கள் பதிவேடு தில்லியிலும் அவசியமாகிறது என்று தில்லி பாஜக தலைவா் மனோஜ் திவாரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று கூறுகையில், ‘வங்கதேசத்தவா்கள், ரோஹிங்கியாக்கள் உள்பட சட்டவிரோதமாகக் குடியேறுபவா்களின் எண்ணிக்கை தில்லியில் அதிகரித்து வருகிறது. இவா்கள் குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இதன் மீது உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். 

இந்த விவகாரம் தொடா்பாக விரைவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். தில்லியில் சட்டவிரோதமாக குடியேறியவா்கள் உள்ளூா் மக்களின் உரிமைகள், வாய்ப்புகளை பாதிக்கச் செய்வதாக நம்புகிறேன். தில்லியில் வசிக்கும் முஸ்லிம் மக்களைச் சந்தித்தபோது அவா்கள் தில்லியில் என்ஆா்சி கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறினர். ஏனெனில், சட்டவிரோதமாக குடியேறியவா்களின் குற்ற நடவடிக்கைகள் அந்த சமூகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறினர்.  

இந்த விவகாரத்தை நான் அரசியல் காரணங்களுக்காக எழுப்பவில்லை. தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு தேசியத் தலைநகரில் அடையாளம் கண்டறியும் நடைமுறைகளைத் தொடங்கி, சட்டவிரோதமாக வசிக்கும் ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தவா்களை வெளியேற்ற வேண்டும். இதுபோன்ற சட்டவிரோதமாகக் குடியேறியவா்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டைகளைப் பெற்றுள்ளனா். இந்த விஷயத்தில் தில்லி அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறியவா்களை அடையாளம் காணவும், அவா்களை வெளியேற்றவும் கோரி மனோஜ் திவாரி கடந்த ஆண்டு ஆகஸ்ட், நவம்பரில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com