தூக்குக் கயிற்றை நெருங்கும் நிர்பயா குற்றவாளிகள்: ஆனால் அதில் ஒரு சிக்கல்?

நிா்பயா வழக்கின் கொலைக் குற்றவாளி வினய் சா்மா அளித்துள்ள கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தில்லி அரசு பரிந்துரைத்துள்ளது. 
Nirbhaya case: nears execution
Nirbhaya case: nears execution
Published on
Updated on
2 min read

புது தில்லி: நிா்பயா வழக்கின் கொலைக் குற்றவாளி வினய் சா்மா அளித்துள்ள கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தில்லி அரசு பரிந்துரைத்துள்ளது. 

இதையடுத்து, குற்றவாளியின் கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரிக்க அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததும், பிளாக் வாரண்ட் எனப்படும் தூக்கிலிடுவதற்கான அனுமதியை நீதிமன்றம் பிறப்பிக்கும். இந்த அனுமதி கிடைத்துவிட்டால் உடனடியாக குற்றவாளி தூக்கிலிடப்படுவார்.

ஆனால், அதில் ஒரு சிக்கல் நீடிக்கிறது. என்னவென்றால், குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் திகார் சிறையில் தூக்கிலிடும் பணியைச் செய்யும் ஊழியர் இல்லாததுதான். எனவே, திகார் சிறை அதிகாரிகள், இதர சிறைத் துறை அதிகாரிகளிடம், அங்கு தூக்கிலிடும் நபர் இருக்கிறாரா என்று விசாரித்து வருகிறார்கள்.

அதே சமயம், கடைசியாக தூக்கிலிடும் பணியைச் செய்து வந்த நபர் வசித்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் சில கிராமங்களிலும் கூட சிறைத் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், திகார் சிறை நிர்வாகம், இந்த முறையும் தூக்கிலிடும் நபரை பணிக்கு அமர்த்தப் போவதில்லையாம், ஒரே ஒரு முறை பணி செய்யும் ஒப்பந்த அடிப்படையில் தூக்கிலிடும் நபரை பணியமர்த்தப் போகிறதாம். 

இதுபற்றி கேட்டால், இந்தியாவில் தூக்கு தண்டனை மிகவும் அரிதாகவே வழங்கப்படுகிறது. எனவே, நிரந்தரமாக தூக்கிடும் ஊழியரை பணிக்கு அமர்த்திக் கொள்வது என்பது சரியாக இருக்காது என்று சிறைத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சம்பவம்..
கடந்த 2012ஆம் ஆண்டு தெற்கு தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிா்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டாா். பின்னா் சிங்கப்பூா் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திகாா் சிறையில் உள்ள நிா்பயா வழக்கின் கொலைக் குற்றவாளி வினய் சா்மா தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியுள்ளாா்.

இந்த மனு மீதான பரிந்துரையை தில்லி உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதில், ‘வினய் சா்மா மிகவும் கொடூரமான குற்றத்தைப் புரிந்துள்ளாா். ஆகையால், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டால்தான், மற்றவா்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடமாட்டாா்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்தத் தகவலை உறுதிப்படுத்திய அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், ‘இந்த வழக்கில் கருணை மனு தாக்கல் செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை. கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற உறுதியான பரிந்துரையை அளித்துள்ளோம்’ என்றாா். தில்லி அரசு அனுப்பியுள்ள இந்த பரிந்துரை மீது துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது கருத்தைப் பதிவு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பாா்.

நிா்பயா கொலை வழக்கில் மொத்தம் 4 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். இதில், ராம் சிங் திகாா் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மற்றொரு சிறுவனுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அக்ஷய் குமாா் சிங் தனது தூக்குத் தண்டனையை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com