இந்த தண்டனையால் மகிழ்ச்சி அடைகிறேன்! நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கருத்து!

வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்! என்கவுண்டர் பற்றி பிரபலங்களில் கருத்து! 
இந்த தண்டனையால் மகிழ்ச்சி அடைகிறேன்! நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கருத்து!

தெலங்கானா பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நான்கு பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.  நேற்று (டிசம்பர் 6, 2019) நடைந்த இந்த சம்பவத்தை பாராட்டியும், கண்டனம் தெரிவித்தும் பிரபலங்கள் பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

நடிகர் விவேக் சமூக அக்கறை சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருபவர். தனது ட்விட்டரில் இச்சம்பவம் குறித்து அவர் கூறியது, ' நீதி வென்றது… அந்த சகோதரியின் ஆன்மா சாந்தியடையட்டும். வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். இந்த கடும் நடவடிக்கையை மேற்கொண்ட காவல் அதிகாரிகளுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்' என பதிவிட்டுள்ளார் விவேக்.

விவேக்கின் கருத்தைப் போலவே பலர்  வாழ்த்தும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.  ஒரு சாரார் என்கவுண்டருக்கு ஆதரவு அளித்தும் இன்னொரு சாரார் விமர்சனம் செய்தும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மீடியா செய்திகள் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது. தவிர உண்மை கண்டறியும் குழுவை என்கவுண்டர் நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்க மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.  ஹைதராபாத் என்கவுண்டர் தொடர்பாக பிரபலங்கள் கூறியதன் தொகுப்பு :

கனிமொழி : 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதால் பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில், நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது. அதே வேளையில், என்கவுண்டர்தான் இதற்கு தீர்வா என்றும் கேள்வி எழுகிறது. 

ப.சிதம்பரம் : பலாத்காரம் ஒரு கொடூரக் குற்றம். இதை வலிமையான சட்டங்களுடன் எதிர்கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எனக்கு எந்த ஒரு அனுதாபமும் இல்லை. ஆனால், என்கவுன்ட்டர் கொலைகள் என்பது நமது ஜனநாயக அமைப்புக்கு களங்கம் விளைவிக்கக் கூடியவை. உடனடியாக நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அழுத்தமும் இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் இது தீர்வல்ல. 

விஜயதாரணி : பெண்களுக்கு ஆதரவாக இறைவனே வழங்கிய தீர்ப்பாக கருதுகிறேன், சரியான நடவடிக்கைக்கு எனது பாராட்டுக்கள்! 

பிரேமலதா விஜயகாந்த் : என்கவுன்ட்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டது வரவேற்கத்தக்கது. 

மாயாவதி,பகுஜன் சமாஜ் :  என்கவுண்டர் எதற்கும் தீர்வு கிடையாது. முறையாக விசாரித்து, கடுமையான சட்ட ரீதியான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். நாடு முழுக்க பலாத்காரங்களுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்.  

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் : பலாத்கார குற்றவாளிகளுக்கு கருணை காட்டத் தேவையில்லை, இது போன்ற பலாத்கார சம்பவங்கள் மொத்த நாட்டையும் உலுக்குகிறது.

திருப்தி தேசாய், சமூக ஆர்வலர் : ஐதராபாத் சம்பவம் போல, எல்லா பாலியல் குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டுத் தள்ள வேண்டும்

நிர்பயாவின் தாய் ஆஷா தேவி : இந்த தண்டனையால் மகிழ்ச்சி அடைகிறேன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com