
உத்தரப்பிரதேசத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டு உயிரிழந்த உன்னாவ் பெண்ணின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஓராண்டு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மீது, ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் உதவிக் கேட்டு கதறிய நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடியுள்ளார். மேலும், ஒருவரின் செல்போனை பிடிங்கி, காவல்துறையை உதவிக்கு அழைத்தார். இந்த தகவல்கள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்தில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சகோதரி இன்று, 'உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கு வரும்வரை சகோதரியின் உடலை தகனம் செய்யமாட்டோம். நான் முதல்வரை நேரில் சந்தித்து பேச விரும்புகிறேன். குற்றவாளிகள் உடனடியாக தூக்கிலிடப்பட வேண்டும். எனக்கு அரசு வேலை வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதன்பின்னர் அதிகாரிகள் மற்றும் போலீஸார் பெண்ணின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் உயிரிழந்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஹிந்து கேரா என்ற அவரது கிராமத்தில் அவரது தாத்தா, பாட்டி இறுதிச்சடங்குகளை செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.