குடியுரிமை சட்டத் திருத்தத்தை மறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை: மத்திய அரசு

குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை மறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை: மத்திய அரசு


புது தில்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், ‘அரசிதழ் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநில அரசுகள், குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியல் சாசன அமைப்புக்கு எதிரானது என்றும், அதனை தங்களது மாநிலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருந்தன.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று மறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்குக் கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

7வது ஷெட்யூலின் யூனியன் பட்டியலின் கீழ் பாதுகாப்பு, வெளியுறவு விவகாரம், ரயில்வே, குடியுரிமை உட்பட 97 விஷயங்கள் இடம்பெறும். எனவே யூனியன் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தை, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும், மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com