மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலே குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. 

நேற்று தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று லக்னோ, மும்பை, ஹைதராபாத், பாட்னா உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக, குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். ரெட் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி தலைநகரின் முக்கிய சாலைகள் வழியாக ஜோராசங்கோ தாகுர் பாரி பகுதியில் நிறைவடைந்தது. 

பேரணியின் இடையே பேசிய மம்தா பானர்ஜி, 'முன்னதாக நான் தனியாக போராடினேன். ஆனால், இப்போது தில்லி முதல்வர், பிகார் முதல்வர், பஞ்சாப், சத்தீஸ்கர், கேரள மாநில முதல்வர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தினை எதிர்க்கின்றனர். அனைத்து மாநில முதல்வர்களும் இதனை எதிர்க்க வேண்டும்.

இப்படியே நிலைமை நீடித்தால் ஒரு கட்டத்தில் பாஜக மட்டுமே இந்தியாவில் இருக்கும். மற்ற அனைவரையும் வெளியேறச் செய்துவிடுவார்கள். அது ஒருபோதும் நடக்காது. இந்தியா அனைவருக்கும் உரியது. குடியுரிமைச் சட்டம் யாருக்கானது? நாம் அனைவரும் குடிமக்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதனை எதிர்க்க வேண்டும். 

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஒருபோதும் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தமாட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை நாங்கள் போராட்டத்தைத் தொடருவோம்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com