
விவசாயிகளுக்கான சுகாதார காப்பீட்டுத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஏற்கெனவே அமலில் இருந்து வந்த விவசாயிகளுக்கான சுகாதார காப்பீட்டுத் திட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் முந்தைய காங்கிரஸ் அரசில் முடக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தன. அதை பரிசீலித்த மாநில அரசு, விவசாயிகளுக்கான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2019-20-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது.
சுகாதார காப்பீட்டுத் திட்டம் அமலில் இருந்தபோது, அதன் பயனை லட்சக்கணக்கான விவசாயிகள், சாதாரண மக்கள் அனுபவித்தனர். அதனால் அந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத்), ஆரோக்கிய கர்நாடகம் என்ற திட்டத்தின் மறுபதிப்பாகும். எனவே, இந்த திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு அதிகப்படியான நிதியை ஒதுக்குகிறது. எனவே, சுகாதார காப்பீட்டுத் திட்டம் கர்நாடக அரசினுடையது என்று கூறலாம். ஆனால், இந்தத் திட்டத்தை தங்களுடையது என்று மத்திய அரசு கூறுவது சரியல்ல.
எம்.எல்.ஏ.க்களுக்கு இடையிலான தகராறில் ஆனந்த் சிங்கை தாக்கிய வழக்கில் காம்ப்ளி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. கணேஷை விரைவில் கைது செய்ய உள்ளோம். கணேஷை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று பாஜகவினர் சுட்டுரை மூலம் என்னைக் கேட்டுள்ளனர். கணேஷ் எங்கிருந்தாலும் அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு டி.ஜி.பி.யை கேட்டுக் கொண்டுள்ளேன். நான் யாரையும் பாதுகாக்கும் எண்ணத்தில் இல்லை.
கர்நாடகத்தில் ஏற்கெனவே 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பாஜகவினர், நிழலுலக தாதா ரவி பூஜாரியை கைது செய்யாமல் இருந்தது ஏன்? கடந்த 6 மாதங்களாக எனது அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் ரவி பூஜாரியை கைது செய்ய முடிந்துள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.