
புது தில்லி: மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, தமிழக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்னும் இடத்தில கர்நாடகா தடுப்பணை கட்டுவதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்ததற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடர் துவங்கியதிலிருந்து இரு அவைகளிலும் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை முன்வைத்து தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, தமிழக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக புதன்கிழமையன்று மாநிலங்களவை கூடியதும் கர்நாடகாவின் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர். இதன் காரணமாக அவை அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்குப் பிறகு மதியம் அவை கூடியதும், மாநிலங்களவைத் தலைவரான வெங்கய்ய நாயுடு தமிழகத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களை பெயரைக் கூறி எழுப்பி, இன்று முழுவதும் அவையில் இருந்து வெளியேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார்.
அவ்வாறு கூறப்பட்டவர்களில் திமுகவின் கனிமொழி மற்றும் திருச்சி சிவா, அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் மற்றும் செல்வராஜ் ஆகியோர் அடங்குவர்.
அவ்வாறு உத்தரவிட்ட பிறகு அவை 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
அதேசமயம் மக்களவையிலும் அதிமுக உறுப்பினர்கள் தொடந்து கோஷங்களை எழுப்பி வந்தனர்.
இதன் காரணமாக பலமுறை எச்சரித்த பிறகும் தொடந்து அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி, திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களை அவை விதிமுறைகள் எண் 110-ன் கீழ், ஒரு நாள் சஸ்பெண்ட் செய்வதாக வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.
இதே காரணத்திற்காக அதிமுகவின் சந்திரகாசி, பார்தி மோகன், ஜெயவர்தன், பரசுராமன் மற்றும் காமராஜ் ஆகிய ஐந்து பேரும், தொடர்ந்து மக்களவையின் ஐந்து அமர்வுகளுக்கு சஸ்பெண்ட் செய்யபப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
மக்களவை விதி எண் 374 - பிரிவு 8 - ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கபப்டுவதாக அவர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.