தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ராஜிநாமா!

தில்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான்(54), தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டதாகவும்
தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ராஜிநாமா!
Published on
Updated on
1 min read


புதுதில்லி: தில்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான்(54), தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

தில்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், படுதோல்வியை சந்தித்ததையடுத்து, இரண்டு முறை மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சரான அஜய் மக்கான் தில்லி மாநில காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றார்.  

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, அஜய் மக்கான் மே மாதத்தில் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதையடுத்து பதவியில் தொடர்ந்து வந்தார். 

மூன்று மாதங்களுக்கு முன்புகூட உடல்நலக்குறைவு காரணமாக அஜய் மக்கான் ராஜிநாமா செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை காங்கிரஸ் உடனடியாக மறுத்ததுடன், அவர் தற்காலிகமாக பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக விளக்கம் அளித்தது.

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே, தில்லி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அஜய் மக்கான் விலகியுள்ளார். ராஜிநாமா செய்வதற்கு முன்பாக நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்க பதிவில், “2015 தேர்தலுக்கு பிறகு தில்லி காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய 4 ஆண்டுகளில் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்கள் மற்றும் ஊடகத்தினர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததுடன், எனக்கு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உடல்நிலை காரணமாகவே அஜய் மக்கான் ராஜிநாமா செய்திருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பதவி விலகியிருப்பதால், மக்களவைத் தேர்தல் பணிகளுக்கான புதிய மத்திய பொறுப்பு வழங்கப்படலாம் அல்லது தேர்தலில் போட்டியட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

எலும்பியல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான அஜய் மக்கான், சில மாதங்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com