
புது தில்லி: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில், இடம்பெற்றுள்ள நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது, மசூதி என்பது இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் அல்ல என்று கடந்த 1994-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கு, அதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மேலும், இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதன்படி, அயோத்தி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த அக்டோபர் 29-இல் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்களை புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, வரும் ஜனவரி மாதம் விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, வழக்கு விசாரணை ஜனவரி 4-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்து.
அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அயோத்தி வழக்கு ஜனவரி 10-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. இதனால் வெறும் 60 நொடிகளில் இந்த வழக்கு விசாரணை எத்தரப்பு வாதமுமின்றி முடிவுக்கு வந்தது.
முன்னதாக, இந்த விவகாரத்தை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில், இடம்பெற்றுள்ள நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் பாப்தே, ரமணா, யு.யு.லலித் மற்றும் சந்திரசூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.