சீக்கியர்களுக்கு எதிராக மூண்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாரின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்கக் கோரி சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் பாதுகாவலர்கள் இருவரும் சீக்கியர்கள் என்பதால், தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஏறத்தாழ 2,800 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில், தில்லியின் ராஜ்நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், சீக்கியர்களின் புனித இடமான குருத்வாரா ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஜ்ஜன் குமார், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் பல்வான் கோகர் உள்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில், இயற்கை மரணம் ஏற்படும்வரை சஜ்ஜன் குமாரைச் சிறையில் அடைக்க தில்லி உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், விசாரணை நீதிமன்றம் மற்றவர்களுக்கு வழங்கிய தண்டனைகளையும் உறுதிசெய்வதாக தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து, காங்கிரஸில் இருந்து விலகிய சஜ்ஜன் குமார், தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, சஜ்ஜன் குமாரின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தில்லியிலுள்ள விசாரணை நீதிமன்றத்தில் ஆஜரான சஜ்ஜன் குமார், மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!

தடுப்புக் காவலில் ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


